தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம், ஹட்டனில் அனுஷ்டிப்பு

🕔 July 30, 2017

– க. கிஷாந்தன் –

பெருந்தோட்டப் பகுதிகளில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இன்று ஞாயிற்றுக்கிழமை ‘தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம்’ ஹட்டனில் இடம்பெற்றது.

ஹட்டன் பிரின்ஸ் கலாசார மண்டபத்தில் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார தலைமையில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில்  நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரம் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.

மேற்படி தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம் ஓகஸ்ட் மாதம் முதலாந் திகதி முதல் 07 ஆந் திகதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வாகவே ஹட்டனில் தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம் அனுஷ்டிக்கப்பட்டது.

ஹட்டன் பிரின்ஸ் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு முன்னதாக, ஹட்டன் மணிக்கூண்டு கோபுரச் சந்தியிலிருந்து பிரதான பாதை வழியாக ‘தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம்’ எனும் தொனிப்பொருளில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் நடைபவனி ஒன்றும் இடம்பெற்றது.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, சரஸ்வதி சிவகுரு, சுகாதாரத் துறையோடு சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள், பொது மக்கள், தாய்மார்கள், பல்வேறு கழகங்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்