கொகெய்னும், அமைச்சர் றிசாத் பதியுதீனும்: எரியும் வீட்டில் பிடுங்கும் அயோக்கியம்
– ஆசிரியர் கருத்து –
வஞ்சகம் தீர்ப்பது பாவமாகும். பாவத்துக்கு பயராமல் வஞ்சகம் தீர்க்க நினைப்பவர்கள் கூட, எல்லா நேரங்களிலும் அதைச் செய்வதில்லை. நமக்கு தொந்தரவாக இருக்கும் ஒரு நாயை அடித்து விரட்டுவதென்றாலும், அது தூங்கும் போது, அதைச் செய்யக் கூடாது என்பார்கள். அடுத்த மனிதனின் வலியில் மகிழ்வது, கொடிய மிருகத்தின் குணத்துக்கு ஒப்பானதாகும்.
அமைச்சர் றிசாத் பதியுதீனின் கீழுள்ள ‘சதொச’ நிறுவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட சீனிக் கொள்கலனுக்குள் பெருந்தொகை ‘கொகெய்ன்’ போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி குறித்து, அநேகமாக எல்லோரும் அறிவோம். விலை மனுக் கோரல் மூலம் ‘சதொச’ நிறுவனத்துக்கு தனியார் நிறுவனமொன்று கொண்டு வந்த சீனிக் கொள்கலனுக்குள் இருந்துதான், அந்த போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டது. அதுவும், சீனிக் கொள்கலனுக்குள் சந்தேகத்துக்கிடமான பொதிகள் இருப்பதாக ‘சதொச’ நிறுவன ஊழியர்கள்தான் பொலிஸாருக்கு அறிவித்திருந்தனர்.
விடயம் இவ்வாறிருக்க, குறித்த போதைப் பொருளையும், அமைச்சர் றிசாத் பதியுதீனையும் தொடர்புபடுத்தி ஒரு சிலர் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வருகின்றனர். இவர்களில் ஆனந்த சாகர தேரர் என்வர் குறித்துச் சொல்லத்தக்கவர். இவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிக்குகள் அமைப்பின் தலைவராவார். அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது, இந்த தேரருக்கு மிக நீண்ட காலமாகவே பிடிப்பில்லை. அதனால், வில்பத்து காட்டினை அமைச்சர் றிசாத் அழித்து வருகின்றார், அங்கு காணி பிடிக்கின்றார் என்று, குற்றச்சாட்டுக்களைசுமத்தி வருகின்றார். ஆனால், தனது குற்றச்சாட்டுக்களை இதுவரை ஆனந்த சாகர தேரரால் நிரூபிக்க முடியவில்லை. ‘ஹிரு’ தொலைக்காட்சியில் நடைபெற்ற ‘பலய’ எனும் நேரடி அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் விவாதத்தில் ஈடுபட்ட ஆனந்த சாகர தேரர், தனது குற்றச்சாட்டினை நிரூபிக்க முடியாமல், றிசாத் பதியுதீனிடம் மூக்குடைபட்டமையை முழு உலகமும் பார்த்தது.
அமைச்சர் றிசாத் மீது ஆனந்த சாகர தேரர் போன்ற இனவாதிகள் ஒருபுறம் குற்றம் சாட்டி வரும் நிலையில், ‘கொகெய்ன்’ விவகாரத்தை வைத்து றிசாத் மீது சேறடிக்கும் நடவடிக்கையினை, முஸ்லிம் அரசியல் தலைவர் ஒருவர் ரகசியமாகவும், அவரின் ஊடக அடியாட்கள் பகிரங்கமாகவும் மேற்கொண்டு வருகின்றமையைக் காணக் கிடைக்கின்றது. இது, பிணத்தில் அரசியல் செய்வதை விடவும் கேவலமான செயற்பாடாகும்.
நாட்டில் போதைப் பொருள் தொழிலில் அதிகமாக ஈடுபடுகின்றவர்கள் முஸ்லிம்கள் என்கிற ஒரு குற்றச்சாட்டு, இனவாதிகளிடம் உள்ளது. இன்னொருபுறம், வடக்கு முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதில், அமைச்சர் றிசாத் பதியுதீன் விடாப் பிடியாகச் செயற்படுகின்றமையினால், அவர் மீதும் இனவாதிகளுக்கு பெருங் கோபமுள்ளது. இவ்வாறானதொரு நிலையில், எந்தவித ஆதாரங்களுமில்லாமல் சதொச நிறுவனத்துக்கு கொண்டு வரப்பட்ட கொள்கலனில் போதைப் பொருள் இருந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, அதனுடன் அமைச்சர் றிசாத் பதியுதீனைத் தொடர்பு படுத்தி, முஸ்லிம் அரசியல் தலைவர் ஒருவரின் ஆசிர்வாதத்துடன், அவரின் ஊடகப் ‘பொடிகள்’ அபாண்டமான பிரசாரங்களைச் செய்து வருவது, முஸ்லிம் சமூகத்தை வீணான இக்கட்டுக்குள் மாட்டி விடும் செயற்பாடாகும்.
‘கொகெய்ன்’ விவகாரத்துடன் அமைச்சர் றிசாத் தொடர்புபட்டுள்ளாரா இல்லையா என்பதைக் கண்டறிய சட்டத்தை நடைமுறைப் படுத்துகின்றவர்கள் உள்ளனர். அதை அவர்கள் செவ்வனே நிறைவேற்றுவார்கள். அதற்கு முன்பாக, குறித்த முஸ்லிம் அரசியல் தலைவரின் ஊடக ‘அடிபொடிகள்’, அமைச்சர் றிசாத்தை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு செய்திகளையும், கட்டுரைகளையும் தொடராக எழுதிக் கொண்டிருப்பது முட்டாள்தனமாக செயற்பாடாகும்.
அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் இருக்கும் அரசியல் போட்டியை, அரசியல் ரீதியாகவே தீர்த்துக் கொள்தல் வேண்டும். அதனை விட்டு, முஸ்லிம் சமூகத்துக்கே அவமானத்தை ஏற்படுத்தும் விதமாக போதைப் பொருள் கடத்தலுடன், எவ்வித ஆதாரங்களுமில்லாத நிலையில், றிசாத் பதியுதீனை பிணைத்துப் பேசுவதும், எழுதுவதும் சமூக துரோகமாகும்.
அதுவும், ‘கொக்கெய்ன்’ சம்பவத்துடன் அரசாங்கத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவிதமான தொடர்புகளுமில்லை என்று, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க நாடாளுமன்றில் மிகத் தெளிவாகக் கூறிய பிறகும், மேற்படி ஊடக ‘அடிபொடிகள்’, றிசாத் பதியுதீனுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றமையை என்னவென்பது?
ஒரு வீடு தீப்பற்றி எரிகின்றபோது, மனிதாபிமானமும் கருணையும் உள்ள ஒருவர், அந்தத் தீயினை அணைக்கும் பொருட்டு, ஆகக் குறைந்தது ஒரு வாளி நீரை ஊற்றி விட்டுச் செல்வார். கருணையற்றவர்கள் கண்டும் காணாமல் கடந்து போவார்கள். ஆனால், அயோக்கியர்கள் – அந்த சமயத்தைப் பயன்படுத்தி, வீட்டிலுள்ள பொருட்களைப் பிடுங்கியெடுத்துக் கொண்டு செல்வார்கள். ‘கொகெய்ன்’ விவகாரத்தில் அமைச்சர் றிசாத்தின் பெயரைப் பயன்படுத்துகின்றவர்கள், இறுதியாகச் சொன்ன வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த அயோக்கியத்தனம் – மக்களுக்கும் புரியாமலில்லை.