‘கறை படியா கரம்’ ஏ.ஆர். மன்சூர் காலமானார்

🕔 July 25, 2017

– எம்.எஸ்.எம். ஸாகிர் –

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை காலமானார்.

ஏ.ஆர். மன்சூர் 1933 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி பிறந்தவர். மரணிக்கும் போது அவருக்கு 85 வயது.

வர்த்தக மற்றும் கப்பல்துறை முன்னாள் அமைச்சரான ஏ.ஆர். மன்சூர், குவைத் நாட்டுக்கான இலங்கைத் தூதுவராகவும் பணிபுரிந்துள்ளார்.

கல்முனையை சொந்த இடமாகக் கொண்ட இவர், ஒரு சட்டத்தரணியுமாவார்.

அம்பாறை மாவட்டத்தின் முன்னேற்றத்துக்காக உழைத்த நேர்மையான, ஒழுக்கமான அரசியல் தலைமையாக ஏ. ஆர். மன்சூர் விளங்கினார்.

தான் அமைச்சராகப் பதவி வகித்த போது, ஐக்கிய நாடுகள் சபையில் மன்சூர் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் இணைப்பு செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூரின் தந்தையாவார்.

இவரை ‘கறை படியாத கரமுறையவர்’ என்று பலரும் அழைப்பார்கள். எந்தவிதமான லஞ்ச, ஊழல் மற்றும் மோசடிச் செயற்பாடுகளிலும் இவர் ஈடுபட்டதாக வதந்திகள் கூட கிடையாது என்று கூறுவார்கள்.

கொழும்பு திம்பிரிக்கஸ்யாயவில் தற்போது வைக்கப்பட்டுள்ள ஜனாஸா, இன்று செவ்வாய்க்கிழமை கல்முனைக்கு கொண்டுவரப்படும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்