அமைச்சர் றிசாத்தை பதவி நீக்குவதற்காகவே, ஆனந்த தேரர் அபாண்டம் சுமத்துகிறார்

🕔 July 21, 2017

 

தொச களஞ்சியசாலையில் கைப்பற்றப்பட்ட கொகெய்ன், வில்பத்துவில் இருந்து கொண்டுவரப்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீனும் அவருடைய சகோதரருமே சம்பந்தப்பட்டிருப்பதாகவும் ஆனந்த சாகர தேரர் அப்பட்டமான பொய் ஒன்றைக் கூறி, மக்களை பிழையாக வழிநடாத்தப் பார்க்கின்றார் என்று, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சீனிக் கொள்கலன் சுங்கத் திணைக்களத்தினால் விடுவிக்கப்பட்டு, ஒறுகொடவத்தை கொள்கலன்கள் பரிசோதனை இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என்றும், பின்னர் அங்கிருந்து ரத்மலான சதொச களஞ்சியசாலைக்கு கொள்கலன் எடுத்துவரப்பட்டபோதுதான்,  அதனுள் கொகெய்ன் காணப்பட்டதாகவும், ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிசார் பகிரங்கமாக அறிவித்த பின்னரும், றிசாத் பதியுதீன் மீது ஆனந்த சாகர தேரர் பழி சுமத்திப் பேசுகின்றமை பொய்யாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீனை, அமைச்சர் பதவியிலிருந்து எவ்வாறாவது நீக்கி விட வேண்டுமென்று இனவாதிகள் முயற்சிக்கின்றனர்.

குறிப்பாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பௌத்த பிக்குகள் சம்மேளனத்தின் செயலாளரான ஆனந்த சாகர தேரர்,  நீண்ட காலமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

வில்பத்துவை அமைச்சர் றிஷாட் பதியுதீன் அழித்து, முஸ்லிம்களை அங்கு குடியேற்றி வருவதாக நீண்டகாலமாக கூறிவரும் தேரர், அந்த விடயம் தொடர்பில் இனவாதச் சூழலியாளர்களுடன் இணைந்து, பிழையான தகவல்களை அறிக்கைகளாக்கி ஜனாதிபதியிடமும் கையளித்திருந்தார்.

அதுமட்டுமன்றி இனவாத ஊடகங்களின் துணையுடன் ஊடகவியலாளர் சந்திப்புகளை நடாத்தியதுடன்
, முசலிப் பிரதேசத்துக்கு, அந்த ஊடகவிலாளர்களை அழைத்துச் சென்று, முஸ்லிம்களின் பூர்வீகக்காணிகளில் குடியேற்றத்துக்காக அமைக்கப்பட்டிருந்த கொட்டில்களை படம்பிடித்துக்காட்டி,  வில்பத்து அழிக்கப்பட்டுள்ளதாக பிழையாகச் சித்தரித்தார்.

இந்த அராஜகச் செயற்பாடுகள்  போதாதென்று, அமைச்சர் றிஷாட் பதியுதீனை எவ்வாறாவது அவமானப்படுத்த வேண்டுமென்ற தீய நோக்கத்தில், தனியார் தொலைக்காட்சியொன்றில் விவாதம் நடாத்தி, இல்லாத பொல்லாத அபாண்டங்களை அமைச்சர் மீது சுமத்தினார்.

ஆனந்த தேரர் தமது நடவடிக்கைகளை இத்துடன் மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. கடந்த வாரமும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அமைச்சர் றிஷாட் பதியுதீனும் அவரது சகோதரருமே வில்பத்துவிலிருந்து போதை வஸ்துக்களை நாட்டுக்குள்ளே கொண்டுவருவதாக, அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.

இனவாதிகளின் நிகழ்ச்சி நிரலை தேரர் அச்சொட்டாக நடைமுறைப்படுத்தி வருகிறார். ஆனந்த சாகரவினதும் அவரைச் சார்ந்த இனவாதக் கும்பலினதும் ஒரே நோக்கம், அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அமைச்சுப் பதவியை எவ்வாறாவது பறித்து விட வேண்டும் என்பதேயாகும்.

சதொச களஞ்சியசாலைக்குக் கொண்டவரப்பட்ட சீனிக்கொள்கலனில் கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்டதை தமக்குச் சாதமாக இப்போது பயன்படுத்தும் தேரர், நேற்று வியாழக்கிழமை மீண்டும் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி, அமைச்சர் றிஷாட் மீது வீண்பழி சுமத்தினார். மேலும், அமைச்சர் றிஷாட் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அதன்போது வலியுறுத்தியுள்ளார்.

ரத்மலான சதொச களஞ்சியசாலைக்கு வந்த கொள்கலனில் வித்தியாசமான பொருள் இருப்பதாக அங்குள்ள அதிகாரிகளும்
, நிறுவனத்தலைவரும் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய பின்னரும், தேரர் மீண்டும் மீண்டும் அமைச்சரின் மீது இந்த விடயத்தில் விரல் நீட்டுவதில் இவரது உள்நோக்கம் என்னவென்று தெளிவாக விளங்குகின்றது.

அமைச்சர் றிஷாதை குறி வைத்து
, அவரை பொறிக்குள் மாட்டுவதே தேரரின் இலக்காக இருக்கின்றது. அரசியல் ரீதியில் அமைச்சர் றிஷாதுக்கு எதிரானவர்கள், தேரரின் இந்த நடவடிக்கையில் உள்ளுர சந்தோசப்படுவது அவர்களது பினாமி எழுத்துக்களிலிருந்து விளங்குகின்றது.

முஸ்லிம் சமுதாயத்துக்கு பிரச்சினைகள், ஆபத்துக்கள் ஏற்படும் போதெல்லாம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் முன்னின்று துணிந்து குரல் கொடுப்பதாலும், முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்தில் அக்கறையுடன் அவர் செயற்பட்டு அகதி மக்களை தமது சொந்த இடங்களில் எப்படியாவது குடியேற்ற வேண்டுமென முயற்சிப்பதனாலுமே,  அமைச்சர் றிஷாதின் அதிகாரத்தை எவ்வாறாவது பறித்துவிட வேண்டுமென இனவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், இதன் பின்னணியில் பல்வேறு சக்திகள் செயற்பட்டுவருவதாகவும் அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பிக்கு உடை அணிந்த ஒருவர் பௌத்த தர்மத்துக்கும் பௌத்த மதக் கோட்பாடுகளுக்கும் மாற்றமாகச் செயற்பட்டு, அபாண்டமான பொய்களையும், கட்டுக்கதைகளையும் கூறுகின்றமையை உடனடியாக நிறுத்திக்கொள்வது ஆரோக்கியமானதென்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments