அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கட்டணம் செலுத்தாத நீர் இணைப்புக்கள், திங்கள் முதல் துண்டிப்பு
– முஸ்ஸப் –
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிக கட்டண நிலுவையினைக் கொண்ட, நீர் பாவனையாளர்களின், நீர் இணைப்புக்களைத் துண்டிக்கும் நடவடிக்கைகள், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து மேற்கொள்ளப்படவுள்ளன.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அட்டாளைச்சேனை காரியாலயப் பொறுப்பதிகாரி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
ஒரு மாத காலத்துக்கும் அதிகமான நிலுவைத் தொகையைக் கொண்டவர்களின் நீர் இணைப்புக்களே இவ்வாறு துண்டிக்கப்படவுள்ளன.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அட்டாளைச்சேனை காரியாலய நிருவாகத்தின் கீழ் சுமார் 5300 நீர் இணைப்புக்கள் உள்ளன.
இவற்றில் சுமார் 300 இணைப்புக்கள், ஒரு மாதத்துக்கும் அதிகமான கட்டண நிலுவையினைக் கொண்டுள்ளன என்று, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அட்டாளைச்சேனை காரியாலயத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.