உலகில் அல்லலுறுவோர் அனைவருக்கும், விடுதலை வேண்டி பிரார்த்திப்போம்: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர்

🕔 July 18, 2015

SLJI - 01நாடும் சமூகமும் சிறப்புடன் செழித்தோங்குவதற்காகவும், உலகில் துன்பப்படுவோர் அல்லலுறுவோர் அனைவருக்கும் – விடுதலை கிடைப்பதற்காகவும் இந்நாளில் இருகரமேந்தி அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம் என்று, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர், உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எமது முன்மாதிரிகள் – நற்குணங்கள் என்பவற்றால், மனித சமூகத்திற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாக விளங்குவோம் எனவும் அவருடைய வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

ஈகைத் திருநாள், நோன்புப் பெருநாள் மகிழ்ச்சிகளில் உங்கள் அனைவரோடும் இணைந்து கொள்ளும் வேளை, இந்நாளின் பேறுகள் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கப் பிரார்த்தித்தவனாக, பெருநாள் வாழ்த்துக்களை நாட்டுக்கும் சமூகத்திற்கும் தெரிவிப்பதில் பேருவகை அடைகின்றேன்.

ஒரு மாதகால வணக்கங்கள், நற்செயல்கள், தர்மங்கள், தார்மிகப் பயிற்சிகள் அனைத்தையும் பெற்ற நிலையில், இனிவரும் பதினொரு மாதகால வாழ்க்கைக்காக தம்மை தயார்படுத்திய மகிழ்ச்சியைக் கொண்டாடுவதும், குர்ஆனை இறக்கி மனித சமூகத்திற்கு வழிகாட்டிய மாதத்தின் நாயகனுக்கு நன்றி செலுத்துவதும்தான், எமது இந்தப் பெருநாளின் அர்த்தமாகும்.

எமது பெருநாள் என்பது – களியாட்டங்களும் பொழுது போக்குகளும் நிறைந்ததல்ல. திக்ருகளும், தௌபாவும், இஸ்திஃபாரும், புன்முறுவலும், ஸலாமும், முஆனகாவும், முஸாபஹாவும், நலம் விசாரிப்புகளும், பகை மறந்தலும், மன்னித்தலும், சகவாழ்வும், சமாதானமும், அமைதியும், பிரவாகிக்க வேண்டிய நாளே – எமது பெருநாளாகும்.

இந்த அர்த்தங்களைப் பிரதிபலிக்கும் நாளாக, இந்த நன்நாளைக் கொண்டாடி – சமூகத்திற்கும், நாட்டுக்கும் சுபசோபனங்களை வழங்கும் சமூகமாக திகழ்வோமாக.

நாடும் சமூகமும் சிறப்புடன் செழித்தோங்குவதற்காகவும், உலகில் துன்பப்படுவோர் அல்லலுறுவோர் அனைவருக்கும் விடுதலை கிடைப்பதற்காகவும், இந்நாளில் இருகரமேந்தி அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

அதேவேளை எமது முன்மாதிரிகள், நற்குணங்கள் என்பவற்றால் மனித சமூகத்திற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாகவும் விளங்குவோம்.

அல்லாஹ், இந்த நந்நாளில் எம்மனைவரையும் அவனது நல்லடியார்கள் வரிசையில் இணைத்து அருள்புரிவானாக.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்