மாட்டிறைச்சிக்கு நிர்ணய விலை; கிண்ணியா நகர சபை அதிரடி; ஏனையவர்களும் முயற்சியுங்கள்

🕔 July 6, 2017
– றிசாத் ஏ காதர் –

மாட்டிறைச்சி ஒரு கிலோ 1000 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், அதற்கான உச்ச விலையாக 605 ரூபாவினை கிண்ணியா நகர சபை நிர்ணயத்துள்ளது.

கிண்ணியா நகர சபையின் செயலாளர் எம்.ஜே.எம். அன்வர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கடித்துக்கு அமைவாக, இந்த இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து இந்த நிர்ணய விலை அமுலாக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, ஒரு கிலோ தனி மாட்டிறைச்சி 605 ரூபாய் எனவும், எலும்புடன் ஒரு கிலோ மாட்டிறைச்சி 495 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியாவில் கடந்த காலங்களில் தனி மாட்டிறைச்சி 700ரூபாவுக்கும், எலும்புடன் இறைச்சி 600ரூபா தொடக்கம் 650 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது.

இது தொடர்பில் பொதுமக்கள் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு இணங்க, கிண்ணியா நகர சபை, இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், அநேகமான பிரதேசங்களில் தனி மாட்டிறைச்சி 1000 ரூபாவுக்கும், எலும்புடன் ஒரு கிலோ மாட்டிறைச்சி 800 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே, மாட்டிறைச்சிக்கு கிண்ணியா நகர சபை, நிர்ணய விலை அறிவித்தமை போன்று, ஏனைய பிரதேசங்களின் உள்ளுராட்சி சபைகளும் செயற்பட்டு, பொதுமக்களின் வாழ்க்கைச் சுமையினை தங்களால் முடிந்தளவு குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்