போலி நாணயத்தின் புழக்கம் அதிகரிப்பு; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
குற்றப் புலனாய்வு பிரிவினர் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, 38 லட்சத்து 94 ஆயிரத்து 600 ரூபாய்க்கு இணையான போலி நாணயத் தாள்களைக் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் போலி நாணயம் தொடர்பான குற்றங்களைக் கையாளும் துறையினருக்குக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், மேற்படி நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், போலி நாணயத் தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.
இதேவேளை, போலி நாணயத் தாள்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ள பொலிஸார், அவ்வாறான நாணயத் தாள்கள் தொடர்பில் தகவலறிந்தால், 011- 2 326 670 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக, குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு அறிவிக்குமாறு வேண்டுகின்றனர்.