செப்டம்பரில் தேர்தல்; பிரசன்ன தலைமையிலான குழுவிடம், அமைச்சர் பைசர் முஸ்தபா வாக்குறுதி

🕔 June 25, 2017

ள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்துவதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தம்மிடம் உத்தரவாதம் வழங்கியதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர், நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்னவின் தலைமையில், அமைச்சர் பைசர் முஸ்தபாவை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அவருடைய அமைச்சில் சந்தித்தனர்.

இதன்போதே, மேற்கண்ட உறுதிமொழியினை அமைச்சர் வழங்கினார் என்று, பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.

“தேர்தலை நடத்துவதற்கு அமைச்சர் விருப்பமுடையவராகவே தெரிகிறார். ஆனால், அரசாங்கம் தேர்தலை பிற்போட்டு வருகிறது” என்று, பிரசன்ன சுட்டிக்காட்டினார்.

“அமைச்சர் உத்தரவாதம் வழங்கியவாறு, செப்டம்பரில் தேர்தல் நடைபெறா விட்டால், பெருமளவான மக்களை கொழும்பில் ஒன்று திரட்டி, தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவோம்” எனவும் பிரசன்ன ரணதுங்க அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் வென்று விடுவார் என்கிற பயம் அரசாங்கத்துக்கு இருக்கிறது. அதனால்தான், தேர்தலை ஆட்சியாளர்கள் பிற்போடுகின்றனர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்