பொதுபல சேனாவை மைத்திரிதான் பாதுகாக்கின்றார்; காரணம் சொல்லி குற்றம் சாட்டுகின்றார் நாமல்

🕔 June 24, 2017

பொது பல சேனா அமைப்பை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனாவே பாதுகாப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குற்றம் சாட்டியுள்ளார்.

அவருடைய ஊடகப்பிரிவினூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

பொது பல சேனா விவகாத்தில் நடந்து கொண்டிருக்கும் விடயங்களை பார்க்கின்ற போது, ஞானசார தேரரின் பின்னால் ஜனாதிபதி மைத்திரி உள்ளார் என்ற அச்சமே மேலோங்கி காணப்படுகிறது. அவ்வாறானதொரு மிகப் பெரும் சக்தியின் பின்னணி இல்லாமல், ஞானசார தேரர் இந்தளவு ஆட்டம் போடவும் முடியாது. இத்தனை எதிர்ப்புக்களை மீறி, அவருக்கு சட்ட சலுகை கிடைக்கவும் முடியாது.

தற்போதைய ஜனாதிபதியின் வெற்றியில், ஊழல் எதிர்ப்பு முன்னணியின் பங்கு அளப்பரியதாக இருந்தது. அதன் தலைவர் உலப்பனே சுமங்கள தேரர், ஜனாதிபதி மைத்திரியின் ஆலோசகர் போன்றே செயற்படுகிறார். இவ்வாறானவர்களின் ஆலோசனை கேட்டே  ஜனாதிபதி மைத்திரி இயங்குவதான கதைகளும் உள்ளன. ஞானசார தேரர் நீதி மன்றில் ஆஜரான நேரம் சுமங்கள தேரர் முன்னின்று அவருடன் வந்திருந்தார். இவ் விடயமானது ஞானசார தேரரின் பின்னால் மைத்திரி இருக்கலாம் என்ற விடயத்தை புடம் போட்டுக் காட்டுகிறது.

ஞானசார தேரரை நான்கு குழுக்கள் அமைத்து  பல இடங்களில் பொலிசார் தேடி இருந்தனர். அவர் இருக்கலாமென சந்தேகப்பட்ட இடங்களில் சு.கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்கவின் வீடே பிரதானமாக சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இதனை முக்கிய அரசியல்வாதிகள் கூறியதாகவே செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த செய்தி தொடர்பில் இதுவரை எந்த விதமான மறுப்பும் வரவில்லை.

பொதுவாக பொது பல சேனாவை இயக்குபவர்கள் எனக்கூறி அமைச்சர் சம்பிக்க போன்ற சிலரின் பெயர்கள் கூறப்படுகின்றமை வழமையாகும். இவ் விடயத்தில் சு.கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்கவின் பெயர் பயன்படுவது இதுவே முதற் தடவை எனலாம். நெருப்பில்லாமல் புகை வருமா? இது உண்மையான செய்தியாக இருக்க வேண்டும் என்பதே பலருடைய சந்தேகமாக இருந்தது.

இது போன்று சுதந்திரக் கட்சியின் மஹியங்கணை அமைப்பாளராக பொது பல சேனா அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது ஜனாதிபதியின் அங்கீகாரம் இல்லாமல் நடக்க சிறிதும் சாத்தியமில்லை. இவ் விடயமானது, பொது பல சேனா அமைப்புடன் ஜனாதிபதி மைத்திரி மிக நெருக்கமான தொடர்பில் உள்ளதை அறிந்து கொள்ளச் செய்கிறது.

இப்படி பல விடயங்களை ஆராய்ந்து பார்க்கின்ற போது, பொது பல சேனாவின் பின்னணியில் ஜனாதிபதி மைத்திரி இருக்க வேண்டும் என்ற அச்சமே மேலோங்கி காணப்படுகிறது.

எமது ஆட்சியில் பொது பல சேனாவுக்கு சம்பிக்கவே ஆதரவு வழங்கி வந்தார். இப்போது அவர் அடுத்த ஜனாதிபதி தேர்தல் கனவில் இருப்பதால், இந்த விடயத்தில் நேரடியாக இறங்காமல் ஜனாதிக்கு கொந்தராத்து வழங்கி இருக்கலாம்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்