சிரேஷ்ட விரிவுரையாளர் அபூபக்கர் றமீஸ், கலாநிதி பட்டம் பெற்றார்

🕔 July 17, 2015

Ramees - 01– எம்.வை. அமீர் –

தென்கிழக்கு பல்கலைக்கழக சமூகவியல் சிரேஷ்ட விரிவுரையாளரான அபூபக்கர் றமீஸ், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் – கலாநிதி பட்டம் பெற்றுக் கொண்டார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில், கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் போது, இவருக்கான பட்டம் வழங்கப்பட்டது.

சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்த இவர், மிஸ்கீன்பாவா அபூபக்கர், உதுமான்கண்டு வதவியத்தும்மா ஆகியோரின் புதல்வராவார்.

சாய்ந்தமருது அல் ஜலால் மகாவித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியினையும், இரண்டாம் நிலைக் கல்வியை கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையிலும் பெற்றுக் கொண்ட றமீஸ், 1997ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு தெரிவுசெய்யப்பட்டார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில்  2000 தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரை, தனது கீழ் நிலைப் பட்டப்படிப்பை சமூகவியல் விசேடதுறையில் கற்ற இவர், 2004 ஆம் ஆண்டு, அதிவிஷேட முதலாம் தரச்சித்தியை பெற்று, தனது தற்காலிக விரிவுரையாளர் நியமனத்தை பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, 2006 ஆம் ஆண்டு – இவர், நிரந்தர சமூகவியல் விரிவுரையாளரானார்.

இதனைத் தொடர்ந்து, தனது பட்ட மேற்படிப்பை பேராதெனிய பல்கலைக்கழகத்தில், சமூகவியல் துறையில் மேற்கொண்டார். “சுனாமியும், அனர்த்த நிவாரணமும்”  எனும் தலைப்பில், தனது ஆய்வை மேற்கொண்டு, 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், பட்டமேற்படிப்பை வெற்றிகரமாக முடித்தார்.

அத்தோடு, அதே ஆண்டு – சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் ஆய்வு புலமைப் பரிசிலை பெற்று, தனது கலாநிதி பட்டப்படிப்புற்காக சிங்கப்பூர் சென்றார். அங்கு சுமார் 04  வருட பட்டப் படிப்பை மேற்கொண்டு, இறுதியில் “இலங்கை மலே முஸ்லிம்களின் இனத்துவ அடையாளமும், அவர்கள் எதிர்நோக்கும் சவால்களும்” எனும் தலைப்பில், தனது கலாநிதி ஆய்வை வெற்றிகரமாக மேற்கொண்டு, அண்மையில் அப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற, பட்டமளிப்பு விழாவில் கலாநிதிபட்டம் பெற்று வெளியேறினார்.

சமூக, பொருளாதார, அரசியல் விடயங்களில் அதிக அக்கறையும், ஆய்வுகளையும் மேற்கொள்ளும் இவர், இலங்கையிலுள்ள சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சமூகவியலாளர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்