தொழுகைக்காக வந்திருந்த முஸ்லிம்களின் வாகனங்களில் தீ; கொழும்பு தெமட்டகொட வீதியில் சம்பவம்

🕔 June 22, 2017

 –  சம்பவ இடத்திலிருந்து இர்ஹாம் சேகுதாவூத் –

கொழும்பு தெமட்டகொட வீதியிலுள்ள அகில இலங்கை தௌஹீத் ஜமாத் பள்ளிவாசலுக்கு அருகில் தரித்து வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் தற்போது (வியாழக்கிழமை அதிகாலை 1.00 மணியளவில்)  தீப்பிடித்து எரிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொழுகையில் ஈடுபடுவதற்காக குறித்த பள்ளிவாசலுக்கு வந்திருந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான வாகனங்களே, இவ்வாறு எரிவதாகக் கூறப்படுகிறது.

பள்ளிவாசலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் வேன் ஒன்றும் இவ்வாறு தீப் பிடித்து எரிவதாக அறிய முடிகிறது.

இந்த நிலையில் தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸார்  சம்பவ இடத்துக்கு வந்து, தீயினை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் நாசகார வேலையில்லை என்றும், இது ஒரு விபத்து எனவும் பொலிஸார் தெரிவிப்பதாக, அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

குறித்த இடத்தில் நிறுத்தி வைத்திருந்த வாகனமொன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏற்பட்ட தீ, அருகிலிருந்த வாகனங்களுக்கும் பரவியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகனங்கள், தீப்பற்றியமைக்கான காரணம் விபத்து என கூறப்பட்ட போதிலும், பள்ளிவாசலை அடுத்து சம்பவம் இடம்பெற்றமையாலும், பள்ளிவாசலுக்கு வந்தவர்களின் வாகனங்களே எரிந்தன என்பதாலும், இதற்கும் இனவாத நாசகார சக்திகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்கிற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருந்தது.

இதனால், அங்கு 
சிறிய பதட்ட நிலை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்