ஒலிம்பிக் பதக்கத்தை ஏலமிடும் சுசந்திகாவின் முடிவு; ஜனாதிபதியின் தலையீட்டால் இடை நிறுத்தம்

🕔 June 6, 2017

னது ஒலிம்பிக் பதக்கத்தை ஏலமிடும் முடிவினை நிறுத்தி வைத்துள்ளதாக, சுதந்திகா ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தலையீட்டினை அடுத்தே, அவர் தனது முடிவினை ஒத்தி வைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

அவுஸ்ரேலியாவின் தலைநகர் சிட்னியில் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், சுசந்திகா வெள்ளிப் பதக்கத்தினை வென்றமை குறிப்பிடத்தக்கது.

தனக்கு வழங்கப்பட்டு வந்த சம்பளத்தினை கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து விளையாட்டுதுறை அமைச்சர் நிறுத்தியமை காரணமாகவே, தனது ஒலிம்பிக் பதக்கத்தினை ஏலமிடுவதற்கு சுசந்திகா தீர்மானித்தார்.

“ஜனாதிபதி செயலகத்திலிருந்து என்னை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட அதிகாரியொருவர், எனது விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்துவார் எனக் கூறினார். அதனாலேயே, பதக்கத்தை ஏலமிடும் தீர்மானத்தை இடைநிறுத்தியுள்ளேன் ” என்று சுசந்திகா தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சின் ஆலோசகராக சுசந்திகா நியமிக்கப்பட்டுள்ளார். ஆயினும், அமைச்சில் கடமையாற்றுவதற்காக சந்தர்ப்பம் தனக்கு வழங்கப்படவில்லை என்று, சுசந்திகா கூறினார்.

நான் வேலை செய்யாமல் சம்பளம் பெறுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் குற்றம் சாட்டுகிறார். ஆனால், நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு கூறப்படவில்லை. எனது திறமையை அமைச்சு பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“விளையாட்டுத்துறை அமைச்சருக்கு சேறடிக்க மட்டுமே தெரியும். ஒலிம்பிக் பதக்கத்தை ஏலமிட்ட பிறகு நான் அவுஸ்ரேலியாவுக்கு சென்று தங்கி விடப்போகிறேன் என்று அவர் கூறுகிறார்.

அப்படியென்றால், நான் அமெரிக்காவுக்கு சென்று தங்கி விட முடியும். எனக்கும், எனது பிள்ளைக்கும் பல நாடுகளுக்கும் பயணிப்பதற்கான வீசா உள்ளன. ஆனால், நான் இலங்கையில்தான் இருக்க வேண்டும்.

எவ்வாறாயினும், இலங்கையில் எனது திறமைக்கு மதிப்பில்லையென்றால், நான் ஒலிம்பிக் பதக்கம் வென்ற அவுஸ்ரேலியாவுக்குச் சென்று, அங்கு கூலி வேலை செய்து பிழைப்பேன்” என்றார்.

Comments