நோன்பு மாதத்தைக் குறி வைத்து, பேரிச்சம் பழ வரி அதிகரிப்பு: பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலா?

🕔 May 5, 2017

– அ. அஹமட் –

னவாதிகள் எதை எல்லாம் செய்ய வேண்டுமென பல வருடங்களாக கூவித் திரிந்தார்களோ அவை அத்தனையும் இன்று மிக அழகிய முறையில் திட்டமிடப்பட்டு ஆட்சியாளர்களின் அங்கீகாரத்துடன் நடந்து கொண்டிருக்கின்றன.

நோன்பு மாதம் வருவதை அறிந்து இந்த அரசாங்கம் பேரீச்சம் பழத்தின் மீதான வரியை அதிகரித்துள்ளது. இதனை நாடாளுமன்றத்தில் வைத்தே ம.வி.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் கந்துநெத்தி கூறி இருந்தார். இதனை இவ்வாட்சியாளர்களுக்கு தெரியாமல் யாராலும் செய்ய முடியாது. இவ்விடயமானது இவ்வாட்சியாளர்கள் இனவாத சிந்தனையில் பயணிப்பதை எடுத்துக் காட்டுகிறது.

முஸ்லிம்கள் நோன்பு காலங்களில் பேரீச்சம் பழத்தை அதிகம் பயன்படுத்துவதால் அவர்களுக்கு இந்த அரசாங்கம் உதவி செய்யும் பொருட்டு அதன் விலையை குறைத்து வழங்க வேண்டும். அனைத்து முஸ்லிம்களும் அவர்களுக்கு தேவையானளவு பேரீச்சம் பழத்தை கொள்வனவு செய்வதை இந்த அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

அவ்வாறில்லாமல் பேரீச்சம் பழத்தின் வரியை அரசாங்கம் அதிகரித்துள்ளமையானது எவ் வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். இலங்கை அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களை தங்களின் மக்களாக கருதி இருந்தால் நிச்சயம் இந்த வேலையை செய்திருக்காது. புது வருட பிறப்பின் போது உணவுப் பண்டங்கள் தட்டுப்படாமலும் விலை அதிகரிக்கப்படாமலும் இருக்க இந்த அரசாங்கம் மிகவும் சிரத்தை எடுத்திருந்தமை இதனை உறுதி செய்கிறது.

முஸ்லிம்களை பொருளாதார ரீதியாக பின்னடையச் செய்யும் திட்டங்களில் ஒன்றாகவும் இதனை நோக்கலாம். முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களில் பொருட்கள் வாங்கக் கூடாதென்ற பிரச்சாரம் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்படுகின்றது. இவ்வாட்சியில் முஸ்லிம்களின் முன்னணி வர்த்தக நிலையமான ‘பெஷன் பக்’ எரிக்கப்பட்டுமிருந்தது.

நோன்பு காலத்தில் முஸ்லிம்களிடையே பேரீச்சம் பழத்தின் புழக்கம் அதிகம் காணப்படும். இதன் வரியை அதிகரிக்கின்ற போது இவ்வரசாங்கம் மிக இலகுவாக முஸ்லிம்களின் பொருளாதாரத்திலிருந்து பல மில்லியன் கணக்கான பணங்களை எடுத்துக் கொள்ளும். ஏழை முஸ்லிம்கள் பேரீச்சம் பழத்தை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனால் முஸ்லிம்களின் நோன்பு கடமையை தடுத்து விடலாம் என இனவாதிகள் கருதுகின்றார்களோ தெரியவில்லை.

இப்படியான இனவாத செயற்பாடுகள் இலங்கையில் எப்போதும் அரங்கேறியதில்லை. இலங்கை முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவுடன் அமைந்த இவ்வாட்சி, பூரண இனவாத நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றமைதான் மிகவும் கவலையான விடயமாகும்.

Comments