அட்டாளைச்சேனைக்கு ‘தேசியப்பட்டியல்’ கிடையாது; சல்மானிடமிருந்து கழற்றி எடுப்பதிலும் ஹக்கீமுக்கு சிக்கல்

🕔 May 2, 2017

– அஹமட் –

ம்பாறை மாவட்டம் இறக்காமம் – மாயக்கல்லி மலை விவகாரத்தால், முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பிரச்சினையை அந்த மாவட்ட மக்கள் மறந்து போயுள்ளதாகவும், மு.கா. தலைமைக்கு இது தற்காலிமான ஓர் ஆறுதலாகிப் போயுள்ளது என்றும் கட்சி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி – மிக விரைவில் வழங்கப்படப் போகிறது என்று, மிகப் பாரியதொரு எதிர்பார்ப்பு கட்சிக்குள் கிளப்பி விடப்பட்டு, பல மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும், அட்டாளைச்சேனைக்கு அந்த அதிஷ்டம் இதுவரை கிடைக்கவேயில்லை.

இந்த நிலையில், தற்காலிகமாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதாகக் கூறப்படும் எம்.எச்எம். சல்மான், அந்தப் பதவியை 20 மாதங்கள் கடந்து வெற்றிகரமாக அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும், சம்மானிடம் வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை, மீளப்பெற்றுக் கொள்வதில் மு.கா. தலைவருக்கு பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கட்சிக்குள் பேசப்படுகிறது.

எனவே, அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுவதற்கு சாத்தியமில்லை என்று, கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் உறுதியாகத் தெரிவித்தார்.

இதேவேளை, பசீர் சேகுதாவூத் மற்றும் ஹசனலி ஆகியோர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை கேட்கிறார்கள் என்று, முன்னர் சாட்டுக் கூறி அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்காமல் மு.கா. தலைவர் ஹக்கீம் தவிர்ந்து வந்தார்.

ஆனாலும், இப்போது சொல்வதற்கு ஹக்கீமிடம் எவ்வித சாட்டுகளும் இல்லாத போதும், தமது ஊருக்கான தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குமாறு, ஹக்கீமிடம் தட்டிக் கேட்பதற்கு, அட்டாளைச்சேனையிலுள்ள கட்சிப் பிரமுகர்கள் எவருக்கும் தைரியம் கிடையாது என்றும் மேற்படி உயர்பீட உறுப்பினர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்