வில்பத்து செல்கிறார் ஹக்கீம்; நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைகின்றனர்

🕔 April 25, 2017
– பிறவ்ஸ் –

மைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் குழு 27ஆம் திகதி வியாழக்கிழமை வில்பத்து பிரதேசத்துக்கு விஜமொன்றை மேற்கொள்ளவுள்ளது. ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில், கடந்த 03ஆம் திகதி ஜனாதிபதி செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர், இவ்விஜயம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறுக், ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள், வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட முசலி மக்கள் என பலரும் இதன்போது வில்பத்து பிரதேசத்துக்கு வருகை தரவுள்ளனர்.

முதற்கட்டமாக முசலி பிரதேச செயலகத்தில் வில்பத்து விவகாரம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்‌ளது. வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறும் நோக்கில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் இதன்போது விசேட அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவுள்‌ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பிலும் கருத்துகள் பரிமாறப்படவுள்ளன.

அதேபோன்று, வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் வில்பத்து விவகாரம் தொடர்பில் தங்களது நிலைப்பாடுகளை தெரிவிக்கவுள்ளனர்.

இதன்பின்னர், வில்பத்து பிரதேசத்தில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாப்பு இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டறிந்து ஆராயவுள்ளனர். அதேவேளை, அங்கு குடியிருக்கும் மக்கள் தமது நியாயங்களையும் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அன்றையதினம் இறுதியாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால், மன்னார் மாவட்டத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள 06 நீர் வழங்கல் திட்டங்களும், ஒரு வீதியும் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் திறந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்