மரத்தின் வேர்களுக்கு விளம்பல்: மு.கா. மாற்று அணியினரின் பொதுக் கூட்டம் பாலமுனையில்

🕔 April 22, 2017

– முன்ஸிப் –

முஸ்லிம் காங்கிரசின் மாற்று அணியினரின் ‘மரத்தின் வேர்களுக்கு விளம்பல்’ எனும் தலைப்பிலான பொதுக் கூட்டம், இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு பாலமுனை பிரதான வீதியில் நடைபெறவுள்ளது.

மு.காங்கிரசின் முக்கியஸ்தரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாளர் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பிரதம அதிதியாக மு.காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி கலந்து கொள்ளவுள்ளார்.

கட்சிக்கும், முஸ்லிம் சமூகத்துக்கும் எதிராக, மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளை அம்பலப்படுத்தும் வகையில், மு.காங்கிரசின் மாற்று அணியினர், ‘மரத்தின் வேர்களுக்கு விளம்பல்’ எனும் தலைப்பில், தொடர்ச்சியான பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நிந்தவூரில் ஆரம்பமான தொடர் பொதுக் கூட்டமானது, பின்னர் பொத்துவிலிலும், அதனையடுத்து சாய்ந்தமருதிலும் நடைபெற்றது.

அந்த வகையில், இன்றைய தினம் பாலமுனையில் நடைபெறும் மேற்படி பொதுக் கூட்டத்தில், மு.கா.வின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

பாலமுனை பிரதேசத்தின் மு.கா. அமைப்பாளராக அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மு.கா.வின் பாலமுனை அமைப்பாளராக சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் பதவி வகித்த நிலையில், அவரை அந்தப் பதவியிலிருந்து விலக்குவதாக அண்மையில் அறிவித்த ரஊப் ஹக்கீம், பாலமுனை அமைப்பாளர் பதவியினை தானே பொறுப்பேற்பதாக அறிவித்தார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்