இறக்காமம் அவலமும், ஹக்கீமின் அலட்சியமும்: புதினம் பார்க்கப் போன, மு.கா. தலைவர்

🕔 April 10, 2017

– முன்ஸிப் அஹமட்

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்திருந்த போதிலும், பாரிய அனர்த்தமும் உயிரிழப்பும் ஏற்பட்ட இறக்காமம் பிரதேசத்துக்கு அவர் செல்லாமல், திறப்பு விழாக்களிலும் புத்தக வெளியீடுகளிலும் கலந்து கொண்டு திரிந்தமையானது, மக்கள் மத்தியில் பாரிய அதிர்ச்சியினையும் கோபத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்தில் விசமான உணவினை உட்கொண்டமை காரணமாக, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மூவர் மரணமடைந்துள்ளனர். கடந்த புதன்கிழமை வாங்காமம் பகுதியில் சமைத்து விநியோகிக்கப்பட்ட உணவை உட்கொண்டவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டனர்.

எவ்வாறாயினும், புதன்கிழமை இந்த அனர்த்தம் ஏற்பட்ட போதிலும், 06 நாட்களின் பின்னர் இன்று திங்கட்கிழமைதான், இறக்காமத்துக்கு மு.கா. தலைவர் சென்றுள்ளார்.

இந்த அனர்த்தத்தை அறிந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இறக்காமம் பிரதேசத்துக்கு வருகை தந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் பண உதவிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நிகழ்சி நிரல்களுடன் அம்பாறை மாவட்டத்துக்கு வந்திருந்த மு.கா. தலைவர் ஹக்கீம், இறக்காமத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பார் என்றுதான், மு.காங்கிரசின் ஆதரவாளர்களும் எதிர்பார்த்தனர்.

ஆயினும், நேற்றைய தினம் சம்மாந்துறையில் கட்டிட திறப்பு விழா மற்றும் ஒலுவிலில் புத்தக வெளியீடு உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து மகிழ்ந்த மு.கா. தலைவர் ஹக்கீம், இன்று திங்கட்கிழமைதான் இறக்காமத்துக்கு சென்றுள்ளார்.

ஹக்கீமுடைய இந்த நடவடிக்கையினை வைத்தே – அம்பாறை மக்கள் மீதும், மனித உயிர்கள் மீதும் அவர் கொண்டுள்ள அலட்சிய மனப்பான்மையினைப் புரிந்து கொள்ள முடிவதாக, அம்பாறை மாவட்ட மு.கா. பிரமுகர் ஒருவர் கூறினார்.

இதேவேளை, இறக்காமம் பிரதேசத்துக்கு ஹக்கீம் சென்ற போதும், அவருக்கு அங்கு உரிய மரியாதைகள் கிடைக்கவில்லை என்றும், அவரின் வருகை குறித்து மக்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை எனவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்