இறக்காமம் அனர்த்தம்; இன்னுமொரு சுனாமி: மூன்றாவது நாளாகவும் பாதிப்பு தொடர்கிறது

🕔 April 7, 2017

– மப்றூக் –

றக்காமம் – வாங்காமம் பகுதியில் சமைத்து விநியோகிக்கப்பட்ட கந்தூரி சோறு உட்கொண்டமை காரணமாக பாதிக்கப்பட்டு, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

மேற்படி சோற்றினை உட்கொண்டமையினால் பாதிக்கப்பட்டவர்கள், இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை இரவும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, மேலதிக சிசிக்சைகளுக்காக, அம்பாறை வைத்தியசாலைக்கு இன்றிரவு பலர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேற்படி கந்தூரிச் சோறு விசமடைந்தமை காரணமாகவே, அதனை உட்கொண்டோர், இவ்வாறான பாதிப்புகளுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எல்லோருக்கும் பாதிப்பில்லை

வாங்காமம் பிரதேசத்தில் சமைத்து விநியோகிக்கப்பட்ட சோற்றினை உட்கொண்டவர்களில் அதிகமானோர் வாந்தி, தலைவலி, வயிற்றோட்டம் மற்றும் கடுமையான காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இருந்தபோதும் குறித்த சோற்றினை ஒரே வீட்டிலுள்ள பலர் உட்கொண்ட போதும், அவர்களில் சிலருக்கு பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிய வருகிறது. சம்பந்தப்பட்ட நபர்களை நேரடியாக சந்தித்துப் பேசியபோது இதனை அறிந்து கொள்ள முடிந்தது.

பிந்திய பாதிப்பு

இதேவேளை, குறித்த உணவினை புதன்கிழமை உட்கொண்ட பலருக்கு, அன்றைய தினமே பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனாலும், சிலருக்கு இரண்டு நாட்கள் கழிந்த நிலையிலேயே அதன் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சிலர், தமக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர். வேறு சிலர் – வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுச் சென்ற நிலையில், பாதிப்பின் தீவிரம் காரணமாக தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அர்ப்பணிப்பு 

இறக்காமம் வைத்தியசாலையில் நூற்றுக் கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றமையினால், அந்த வைத்தியசாலையின் வெளிப் புறத்தில் தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டு, அங்கு நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் பெண் நோயாளர்களும் அடங்குகின்றனர்.

இந்த நிலையில், இறக்காமம் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றார். அதேவேளை, வெளி வைத்தியசாலைகளைச் சேர்ந்த வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பணியாளர்களும் அர்ப்பணிப்புடன் சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்னொருபுறம், இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களும் தற்போதைய அனர்த்த நிலையினை கருத்திற் கொண்டு, தொண்டு அடிப்படையில் பல்வேறு உதவிகளைப் புரிந்து வருகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

பிரார்த்திப்போம் 

இறக்காமம் வைத்தியசாலை மட்டுமன்றி, அக்கரைப்பற்று, அம்பாறை, கல்முனை, அட்டாளைச்சேனை மற்றும் திருக்கோவில் உள்ளிட்ட வைத்தியசாலைகளிலும், உணவு உட்கொண்டமையினால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் கணிசமானோர் சிறுவர்கள் என்பதும் இங்கு கவனத்துக்குரியது.

அம்பாறை மாவட்டத்தில் சுனாமிக்குப் பின்னர் ஏற்பட்ட பாரிய அனர்த்தமாக, இதனை மக்கள் குறிப்பிடுகின்றனர்.

தற்போதைய தகவல்களின்படி இந்த அனர்த்தம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் மூவர் மரணத்தைத் தழுவியுள்ளனர்.

எனவே, இதில் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் சுகமடைய வேண்டுமென, இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்வோம்.

தொடர்பான செய்தி: வாங்காமம் அனர்த்தம்; உணவு விசமானதில் பாதிக்கப்பட்ட மூவர் மரணம்

Comments