இனவாத செயற்பாடுகளை நிறுத்த முடியாமைக்கு, சம்பிக்க காரணமாக இருந்தார்; நாமல் குற்றச்சாட்டு

🕔 April 4, 2017

 

முஸ்லிம்கள் எம்மை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, எங்கள் ஆட்சிக்கு முன்னர் முஸ்லிம்களுக்கு மிகக் கடுமையான கருமை அனுபவங்களை பரிசாக கொடுத்தவர்களுடன், தற்போதைய ஆட்சியாளர்கள் கூட்டுச் சேர்ந்து செயற்படுகின்றனர் என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“எமது ஆட்சிக் காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் பல இனவாத எதிர்ப்புக்களை முகம் கொண்டனர். அதனை நாம் மறுக்க முடியாது. அதனை ஏற்க மறுப்பது உண்மையை ஏற்க மறுப்பதாகிவிடும். அதனை அந்நேரத்தில் நாம் முடிவுக்கு கொண்டுவர சிந்தித்த போதும்,  சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் காரணமாக, அவற்றை செய்ய முடியாது போனது. அந் நேரத்தில் நாமும் சில விடயங்களை கவனத்திற் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தோம்.

எமது ஆட்சியில் மாத்திரம்தான் முஸ்லிம்களுக்கெதிரான இனவாத முன்னெடுப்புக்கள் நடக்கவில்லை. அதற்காக எமது ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றவற்றை சரியென கூறவுமில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினுடைய ஆட்சி காலத்தில் மாவனல்லை கலவரம் இடம்பெற்றிருந்தது.

அதுபோன்று ஐ.தே.கவினுடைய ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்திருந்தனர். முஸ்லிம்களுக்கு எதிரான பல கலவரங்கள் ஐ.தே.கவினுடைய ஆட்சிக் காலத்திலேயே இடம்பெற்றிருந்தன. இவ்வாறெல்லாம் நடந்துள்ள போதும், இன்று முஸ்லிம்கள் எம்மை மாத்திரமே குறை கூறிக் கொண்டு அவர்களுடன் இணைந்துள்ளனர். முஸ்லிம்கள் எமது ஆட்சிக் காலத்திற்கு முன்னுள்ள வரலாறுகளை மீள நினைவுபடுத்திக் கொள்வது சிறந்ததாகும்.

எமது ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற இனவாத செயல்களை எமது ஆட்சிக் காலத்துக்கு முன்னர் இடம்பெற்ற  இனவாத செயல்களுடன் ஒப்பிடும் போது, அளுத்கமை கலவரம் ஒரு கலவரமே அல்ல. இன்று முஸ்லிம்கள் வாக்களித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அளுத்கமை கலவரம் நடக்கும் போதெல்லாம் எங்களுடன் தான் அப்பம் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். இச் சம்பவம் தொடர்பில் எம்மை குற்றம் சாட்டுவதானால் அவரையும் குற்றம் சாட்டுவதே பொருத்தமானது.

அது போன்று இன்றைய ஆட்சியின் பிரதான பங்காளரான சம்பிக்க ரணவக்க இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக புத்தகம் எழுதி, பேரின மக்களிடையே இனவாத நச்சு விதையை விதைத்தவர்களில் முதன்மையானவர். அளுத்கமை கலவரத்தின் பிரதான சூத்திரதாரியும் அவர்தான். இன்று அவர்தான் முஸ்லிம்களின் நல்லாட்சியின் முக்கிய தளபதியாக உள்ளார்.

இவ்வாறானவர்களை நம்பிய முஸ்லிம்கள், அவர்களுடன் கை கோர்த்துக்கொண்டு எங்களை எதிர்த்து பயணித்து கொண்டிருப்பது வேடிக்கையாகவுள்ளது. தற்போது முஸ்லிம்கள் தெளிவு பெற்று நாளாந்தம் எம்மை நோக்கி வருவதை அவதானிக்க முடிகிறது. மிக விரைவில் முஸ்லிம்களின் பங்களிப்புடன் ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்