வில்பத்து வடக்கு வனப்பகுதிகளை, தனி வனமாக பிரகடனப்படுத்தும் அறிவித்தலுக்கு ஜனாதிபதி கையெழுத்து

🕔 March 25, 2017

வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்கேயுள்ள 05 வனப் பகுதிகள் இணைக்கப்பட்டு, தனியான வனமாக பிரகடனப்படுத்துவதற்குரிய வர்த்தமானி அறிவித்தலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளார்.

மேற்படி வனப் பகுதிகள், வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரியதெனக் கூறப்படுகிறது.

இதற்கமைய, வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்காக அமைந்துள்ள வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய மாவில்லு, வெப்பல், மறிச்சிக்கட்டி, விளாத்திக்குளம் மற்றும் பெரியமுறிப்பு ஆகிய பாதுகாக்கப்பட்ட வனங்கள் இணைக்கப்பட்டு வன பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ‘3ஏ’ பிரிவின் கீழ், ‘மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனம்’ என பிரகடனப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு,  ஜனாதிபதி கையொப்பமிட்டார்.

நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது ரஷ்ய விஜயத்தினிடையே இந்தக் கையொப்பத்தினை இட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்ட காடுகளின் எல்லைகளை மாற்ற வேண்டுமாயின், வன பாதுகாப்பு கட்டளை சட்டத்துக்கமைய விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரால் தயாரிக்கப்பட்ட உத்தரவு ஜனாதிபதியால் அங்கிகரிக்கப்படல் வேண்டும். பின்னர் அது – நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும்.

மேற்படி நடவடிக்கை மூலம், மேற்குறித்த வனத்துக்கான உச்ச சட்டபூர்வ பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்படும். வில்பத்து சரணாலயம் மற்றும் அத்துடன் இணைந்துள்ள வனப்பகுதியில் அத்துமீறிய காடழிப்பு இடம்பெறுவதாக கடந்த காலங்களில் ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இருந்த போதிலும், இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 2012/2013 காலப்பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ள வன காணிகளுக்கு மேலதிகமாக ஏனைய காடுகள் துப்பரவு செய்யப்படவில்லையென தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில், இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளுடன் இணைந்ததாக உள்ள காடுகளின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவதற்காக, பாதுகாக்கப்பட்ட வனங்களாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்