பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடியவர்கள் மீது, பொலிஸார் துப்பாக்கிச் சூடு

🕔 March 20, 2017

பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு சென்ற இருவர் மீது, பொலிஸார் துப்பாக்கி சூடு மேற்கொண்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை, சிலாபம் பிரதேசத்தில் இடம்பெற்றது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வழிப்பறித் திருடர்கள் இருவரும், தற்போது சிலாபம் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பெண், தனது பிள்ளையை ஆராய்ச்சிக்கட்டு பகுதியிலுள்ள முன்பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அந்தப் பெண்ணின் கழுத்திலிருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு சென்றர்.

இதன்போது, சம்பவ இடத்துக்கு அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் அயலவர்கள் வந்து சேர்ந்ததோடு, வழிப்பறித் திருடர்களை விரட்டிச் சென்றனர்.

இச் சமயம், அந்த வழியால் வந்த பொலிஸார் இருவரிடம் விபரத்தைக் கூற, திருடர்களை பொலிஸார் விரட்டிச் சென்றனர்.

இந்த நிலையில், தங்கச் சங்கிலியைப் பறித்துச் கொண்டு ஓடியவர்களை நிற்குமாறு பொலிஸார் சைகை செய்தும் அவர்கள் அதனை கருத்திற் கொள்ளவில்லை. இதனையடுத்து, திருடர்களை நோக்கி பொலிஸார் துப்பாக்கிச் சூட்டினை நடத்தினர்.

துப்பாக்கிச் சூட்டில், மோட்டார் சைக்கிளை ஓட்டியவரின் காலில் காயம் ஏற்பட்டதோடு, மற்றையவரும் சிறிய காயங்களுக்குள்ளானார்.

இதனையடுத்து இருவரும், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Comments