சத்தியாக்கிரகம் செய்துவரும் பட்டதாரிகளை சந்தித்தார் ஹிஸ்புல்லா: ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருவதாகவும் உறுதி

🕔 February 26, 2017
– ஆர். ஹஸன் –
கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டுவருவேன் என, ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உறுதியளித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் சத்தியாகிரகம் தொடர்பில் ஆராய்வதற்காக, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று ஞாயிற்றுக்கிழமை சத்தியாகிரகம் நடைபெறும் இடத்துக்குச் சென்றார்.

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகள், பிரச்சினைகளை கேட்டறிந்த ராஜாங்க அமைச்சர், இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரது கவனத்துக்கு கொண்டு வருவதாக உறுதியளித்தார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்பு போராட்டம், இன்று ஞாயிற்றுக்கிழமை ஆறாவது நாளாகவும் தொடர்ந்தது. இந்நிலையில், அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடும் நோக்கில் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அங்கு சென்றார்.

அத்துடன், தான் கொழும்புக்கு சென்ற பின்னர் அரச உயர் மட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி இப்பிரச்சினையை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் அங்கு உறுதியளித்தார்.

ராஜாங்க அமைச்சரின் வருகைக்கு பாராட்டுத் தெரிவித்த வேலையற்ற பட்டதாரிகள், தமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தெரிவித்தனர்.

Comments