நேற்று முளைத்த அரசியல் காளான்களின் பரப்புரைகளுக்கு, மக்கள் செவி சாய்க்க தயாரில்லை: அமைச்சர் றிசாத்

🕔 February 22, 2017

– சுஐப் எம் காசிம் –

யுத்த காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் மக்களுடன் இணைந்து பணியாற்றிய அரசியல்வாதிகள் யார் என்று, மக்களுக்கு நன்கு தெரியும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் காக்கையன் குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறுகையில்;

“நாட்டிலே சமாதானம் ஏற்பட்டு நமது பிரதேசத்திலும் அமைதி ஏற்பட்ட பின்னர், நமது மக்கள் மீளக்குடியேறி ஓரளவு அடிப்படைத் தேவைகளை பெற்றுக் கொண்டு வாழுகின்றனர். இதன்போது வாக்குகளுக்காகவும், அரசியல் இருப்புக்களைப் பாதுகாப்பதற்காகவும் இந்தப் பிரதேசங்களுக்கு வந்து தங்களையும் சேவையாளர்களாக மக்கள் மத்தியில் சிலர் காட்டிக் கொள்கின்றனர்.

நமது சமூகம் குடியிருந்த காணிகளை காடுகள் மூடிக்கிடந்தது. கட்டிடங்கள் தகர்ந்து கிடந்தது. அவற்றை அப்புறப்படுத்தி புதிய கட்டிடங்களையும் வீடுகளையும் பாடசாலை மண்டபங்களையும் மாடி வகுப்பறைகளையும் கட்டிக் கொடுத்தவர்கள் யாரென்று மனச்சாட்சியுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரியும்.

யுத்த காலத்திலே பீதியிலே மக்கள் வாழ்ந்த போது, தீவிரவாத கெடுபிடிகளுக்கு மத்தியிலே இறைவனின் பாதுகாப்பைத்தவிர வேறெந்த பாதுகாப்பும் இல்லாதிருந்தது. அபபோது இந்தப் பிரதேசத்துக்குள் நுழைந்து, மின்சார வசதிகளையும் மற்றும் இன்னோரன்ன தேவைகளையும் கவனித்தவர் யாரென்று நன்றியுள்ள மக்களுக்கு நன்கு தெரியும்.

இனவாதிகளினதும் இனத்துக்காக குரல் கொடுப்பதாக கூறி வருபவர்களினதும் தடைகளுக்கும் முட்டுக் கட்டைகளுக்கும் மத்தியிலேயே, நாம் தொடர்ந்தும் பணி புரிகின்றோம். அவர்களது அபாண்டங்களும் அவச் சொல்லும் எம்மை ஒன்றும் செய்துவிடப்போவதில்லை. மக்களை நிம்மதியாக வாழ வைப்பதே எமது இலக்காகும்.

‘தடியெடுத்தவர்களெல்லாம் சட்டாம்பிகளென்ற நிலை’ இன்று அரசியல் உலகிலே வந்து விட்டதினால் நாங்கள் மிகவும் நுணுக்கமாகவும், கவனமாகவும் பணியாற்ற வேண்டிய நிலை இருக்கின்றது. வேண்டுமென்றே ஊடகங்களில் இட்டுக்கட்டப்பட்ட கதைகளை நேற்று முளைத்த சில அரசியல் காளான்கள் பரப்பி வருகின்றனர். விஷமத்தனமான இனவாதக் கண்ணோட்டத்துடனான இவர்களின் பரப்புரைகளை மக்கள் இப்போது செவி சாய்க்கத் தயாரில்லை.

காக்கையன் குளம், இரணையிழுப்பைக் குளம் போன்ற பிரதேசங்கள், இன ஐக்கியத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகின்றது. இந்த ஐக்கியத்தை சீர் குலைக்க எவரும் இடமளிக்கக் கூடாதெது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்