கே.ஏ. பாயிஸ், ஹுனைஸ் பாறூக் ஆகியோருக்கு ஹக்கீம் அல்வா

🕔 February 12, 2017

Hakeem - 087– அஹமட் –

முஸ்லிம் காங்கிரசில் ஆரவாரமாக இணைந்து கொண்ட புத்தளம் கே.ஏ. பாயிஸ் மற்றும் வன்னி ஹுனைஸ் பாறூக் ஆகியோர், மு.காங்கிரசின் உயர்பீடத்தில் இம்முறை இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தினை மு.கா. தலைவர் ஹக்கீம் பரிசளித்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று சனிக்கிழமை இரவு மு.காங்கிரசின் கட்டாய உயர்பீடக் கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற போது, பாயிஸ் மற்றும் ஹுனைஸ் பாறூக் ஆகியோரை கட்சியின் உயர்பீடத்துக்கு இணைத்துக் கொள்கின்றமை குறித்து ஹக்கீம் எதுவும் பேசவில்லை.

மேற்படி இருவரில் கே.ஏ. பாயில் ஏற்கனவே மு.கா.வின் உயர்பீடத்தில் அங்கம் வகித்ததோடு, கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் பதவி வகித்திருந்தார்.

அ.இ.மக்கள் காங்கிரசினூடாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வகித்த ஹுனைஸ் பாறூக், அந்தக் கட்சியின் தலைவர் றிசாத் பதியுத்தீனுடன் முரண்பட்டுக் கொண்டு, தற்போது மு.காங்கிரசில் இணைந்துள்ளார்.

இந்த நிலையில், வன்னிக்கு மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என, கடந்த வாரம் அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருந்தார். இதனூடாக, ஹுனைஸ் பாறூக்கின் நெஞ்சுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஆசையினை ஹக்கீம் வளர்த்து விட்டார் என்று கூறப்படுகிறது.

இதேவேளை, புத்தளம் பாயிசுக்கும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதாக தனிப்பட்ட ரீதியில் ஹக்கீம் வாக்குறுதி வழங்கியிருந்தார் என்று, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இருந்தபோதும், தங்களை இம்முறை உயர்பீடத்தில் ஹக்கீம் இணைத்துக் கொள்வார் என்று, பாயிஸ் மற்றும் ஹுனைஸ் பாறூக் ஆகியோரும், அவர்களின் ஆதரவாளர்களும் பெரிதாக நம்பியிருந்தனர்.

ஆனாலும், அவர்களையும் அவர்களுடைய ஆதரவாளர்களையும் ஹக்கீம் மிக மோசமாக ஏமாற்றி விட்டார் என்று கூறப்படுகிறது.

Comments