கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் நகைக்கடை உரிமையாளர் பலி; மினுவாங்கொடயில் சம்பவம்
மினுவாங்கொடயிலுள்ள நகைக்கடையொன்றினை கொள்ளையிட முயற்சித்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கடையின் உரிமையாளர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் – முகத்தை மறைக்கும் வகையிலான தலைக்கவசம் அணிந்து வந்த நான்கு பேர், குறித்த நகைக்கடையினை கொள்ளையிட முயற்சித்துள்ளனர்.
இதன்போது, கொள்ளையர்களின் முயற்சியினை கடை உரிமையாளர் தடுத்ததால், கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், உரிமையாளர் பலியானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தின்போது, நகைக்கடையின் ஊழியரொருவருவரும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார் எனவும் தெரியவருகிறது.
இந்த நிலையில், கடையில் எதுவித பொருட்களையும் எடுத்துக் கொள்ளாமல், மேற்படி கொள்ளையர்கள் நால்வரும், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.