புதிய தேர்தல் முறைமையில், சம்மாந்துறைக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி திருத்தப்பட வேண்டும்: மாகாணசபை உறுப்பினர் மாஹிர்

🕔 February 2, 2017
Mahir - 0989– எம்.எம். ஜபீர் –

ள்ளுராட்சி தேர்தலில் புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்தும் எல்லை நிர்ணய குழுவினரின் அறிக்கையில், உரிய சட்டத்திருத்தங்களை செய்யாமல் ஒரு மாத காலத்தினுள் வர்த்தமானியில் பிரசுரிப்பது, சிறுபான்மை மக்களுக்கு  இழைக்கப்படும் பாரியதொரு அநீதியாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் தெரிவித்தார்.

இந்தச் செயற்பாடானது நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆரோக்கியமான செயற்பாடு அல்ல என்றும், இதில் திருத்தங்களை மேற்கொண்டு வர்தமானியில் வெளியிட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;

“உள்ளுராட்சி தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முறைமை மூலம் சம்மாந்துறை பிரதேசத்துக்கு பாரிய அநீதி  இழைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக சம்மாந்துறை பிரதேசத்தில் சுமார் 68 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்களர்கள் உள்ளனர். இப் பிரதேசத்திற்கு 12 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தெஹியத்தக்கண்டி  பிரதேசத்தில் சுமார் 58 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், அப் பிரதேசத்துக்கு 23 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை ஒப்பிட்டு பார்க்கின்ற போது, எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையில் –  பெரும்பான்மை மக்கள் வாழும் பிரதேசத்தில் கூடிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதற்கும், சிறுபான்மை மக்கள் வாழும் பிரதேசத்தில் குறைந்த உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதற்கும் ஏற்ற வகையில் திட்டமிட்டு உள்ளுராட்சி தேர்தலின் புதிய முறைமை வரையப்பட்டுள்ளமை தெட்டத்தெளிவாக தெரிகின்றது.

புதிய உள்ளுராட்சி தேர்தல் முறையானது இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளர்களாக இருக்கின்ற சிறுபான்மை மக்களுக்கு, அரசாங்கம் செய்கின்ற பாரிய துரோகமாகும். 56 இடங்களில் திருத்தங்கள் அவசியமென்று சட்டம் சம்பந்தமாக பரிந்துரை வழங்கியிருக்கின்ற  நிலைமையில், எல்லை நிர்ணயக் குழுவின் தலைவர் அசோக பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் கையொப்பம் இட்டு கையளித்து இருப்பதை ஆராய்ந்து திருத்தங்கள் மேற்கொண்ட பின்னர்தான் வர்தமானியில் பிரசுரிக்க வேண்டும்.

அதில் சம்மாந்துறை பிரதேசம் தொடர்பான திருத்தங்களை மேற்கொண்டு உறுதிப்படுத்தியத்திற்குப் பின்னர்தான் வர்தமானியில் பிரசுரித்தான், சிறுபான்மை மக்களின் உள்ளத்தில் நல்லாட்சி நிலைத்திருக்கும் எனவும் தெரிவித்தார்.

உள்ளுராட்சி தேர்தலில் புதிய முறைமை தொடர்பில் எல்லை நிர்ணயத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என, எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் இணைந்து ஒருமித்த குரலில் பல்வேறு அழுத்தங்களை அரசாங்கத்துக்கு கொடுத்து வருகின்றனர்.

இந்த எல்லை நிர்ணய விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எல்லை நிர்ணய குழு உள்ளுராட்சி மாகாண சபைகள்  அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர், சிறுபான்மை மக்களை மதிக்கின்ற இந்ந நல்லாட்சி அரசாங்கம், எல்லை நிர்ணயத்தில் திருத்தங்களை மேற்கொண்டு அது உறுதிசெய்யப்பட்டதன் பின்னர் வர்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.

Comments