மு.கா. தலைவருக்கான படு குழியும், முன்னேயுள்ள இரண்டு தெரிவுகளும்

🕔 February 2, 2017

Hakeem - 976– தம்பி –

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் அவர்களுக்கு;

நலமாக இருக்கிறீர்களா என்று இந்த இடத்தில் கேட்பது, உங்களை நக்கலடித்த மாரிதி ஆகி விடும் என்பதால், அப்படிக் கேட்க விரும்பவில்லை.

எப்படி நலமாக இருக்க முடியும்? நலமாக இருக்கிற மாதிரியாகவா நடப்புகள் இருக்கின்றன?

உங்களை ஆட்கொண்டிருக்கும் அத்தனை விதமாக உணர்வுகளையும் கொஞ்ச நேரம் ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தப் பதிவினை படியுங்கள்.

‘மடியில் கனமில்லா விட்டால், வழியில் பயமிருக்காது’ என்கிற முதுமொழியொன்று பற்றி நமக்குத் தெரியும். இதை மறுதலையாக; ‘மடியில் கனமிருந்தால், வழியில் பயமிருக்கும்’ என்றும் சொல்லலாம்.

மு.காங்கிரசின் தலைவராகிய உங்களின் மடி நிறைய – எக்கச்சக்கமான ‘கனம்’ இருக்கின்ற கதைகள் பற்றி, நீண்ட காலமாகவே பேசப்பட்டு வருகிறது. உங்கள் மடியிலுள்ள ‘கனம்’ என்னவென்று நீங்கள்தான் மிக நன்றாக அறிவீர்கள்.

மடி நிறைய கனத்தை வைத்துக் கொண்டு – பயமில்லாமல் திரிந்ததும், ‘கனம்’ பற்றி அறிந்த நபரை ‘கை கழுவி’ விட்டதும், உங்களுடைய புத்தி சாதுரியமற்ற செயற்பாடாகும் என்று, வெளியில் பேசிக் கொள்கிறார்கள்.

உங்கள் மடியிலுள்ள கனங்களில் ஏராளமானவை அருவருக்கத்தக்கவையாகும்  என்று கூறப்படுகிறது. உங்களின் மடியில் இவ்வாறான ‘கனம்’ ஏற்பட்ட  கதையை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் சொல்கிறார்கள். “உங்கள் மடியில் யாரோ, கனம் ஏற்றி விட்டார்கள்” என்று, அடுத்தவர் மீது பழி கூறுவதற்கு, நீங்கள் விரல் சூப்பும் பிள்ளையல்ல.

உங்கள் மடியிலுள்ள கள்ளத்தனமான கனதி பற்றி, அடி முதல் – நுனிவரை அறிந்தவரிடம் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்க வேண்டும். அதுதான் சாணக்கியமாகும். ஆனால், “சாது மிரண்டால் காடு தாங்காது” என்று, உங்களுக்கு – துளியளவும் பொருத்தமற்ற பழமொழியினை கூறி, போராளிகளைக் குசிப்படுத்த நினைத்ததன் விளைவை, இப்போது நீங்கள் அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறீர்கள்.

சாணக்கியத் தலைவன் என்கிற அடைமொழிக்குரிய நீங்கள், இப்போது – சாணியை மிதித்த ஒருவரைப் போல் அசிங்கப்பட்டுக் கிடக்கிறீர்கள்.

ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒவ்வொரு வகையான பண்புகள் இருக்கின்றன. நீங்கள் ஏற்றிருக்கும் ‘மு.கா. தலைவர்’ எனும் பாத்திரம் மிகவும் பெறுமதியானதாகும். அந்தப் பாத்திரத்தை நீங்கள்தான் சுமக்க வேண்டுமென்றில்லை. ஒரு கழுதை கூட, அதனைச் சுமக்கலாம். ஆனாலும், அந்தக் கழுதை – யோக்கியமானதாக இருக்க வேண்டும் என்றுதான் மு.கா.வை நேசிப்பவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

உங்கள் மடியில் நீங்கள் சுமந்திருக்கும் கனதிகள், பாவங்களின் மூட்டை என்கிறார்கள். பாவத்தை பாவத்தால் மறைத்து விட முடியாது.  இறுக்கிக் கட்டப்பட்ட கோணிப்பை – அவிழ்க்கப்படும் போது, உள்ளேயிருந்து துள்ளிப் பாயும் கடுவன் பூனை போல், உங்கள் மடியில் – நீண்டகாலமாக நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் பாவங்கள் வெளிவரத் துவங்கியுள்ளதாக, பலரும் பேசிக் கொள்கிறார்கள்.

இப்படியொரு நிலை உங்களுக்கு ஏற்பட்டமைக்கு யார் காரணமென்று இப்போதாவது நீங்கள் யோசித்துப் பார்க்கவில்லை என்றால், நீங்கள் பரிதாபத்துக்குரியவர்தான். உங்களுக்கும், உங்கள் மடியின் கனதியை அறிந்தவருக்குமிடையில் முறுகல்கள் ஏற்பட்ட போதெல்லாம், உங்கள் விசுவாசிகளாக தங்களைக் காட்டிக் கொள்ளும் பொருட்டு – பேய்க் கூத்தாடியவர்கள்தான், உங்களுக்கு எதிரேயுள்ள படுகுழியைத் தோண்டுவதற்கான மண் வெட்டிகளைச் செய்து கொடுத்தார்கள் என்பதை, இன்னுமா நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லை.

உங்களின் மடியிலுள்ள கனதிகளின் கதை பற்றியும், அவற்றினை அறிந்து வைத்திருப்பவரின் இருட் குகை பற்றியும் , உங்களுக்காகக் கூக்குரலிட்டவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை என்பதால், அவர்கள் பொத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று, உங்களை நேசிப்பவர்கள் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், நிலைமை வேறு மாதிரியாகி விட்டது.  அவர்கள் கூக்குரலிட்டு, உங்களை மௌனியாக்கி விட்டார்கள்.

இப்போது உங்கள் முன்னால் இரண்டு தெரிவுகள் மட்டுமே உள்ளன. ஒன்று: சண்டைக்காரனின் காலில் விழுவது. மற்றையது: எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு, உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதாகும்.

முதலாவது கலை – உங்களுக்குக் கைவந்தது.

இரண்டாவது – இதுவரை நீங்கள் முயன்று பார்க்காதது.

Comments