ஹக்கீமின் குற்றத்தை மூடி மறைக்கவே, மஹிந்தவுக்கு மு.கா. ஆதரவளித்தது: அம்பலப்படுத்தினார் பசீர்
மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் செய்தாகக் கூறப்படும் மிகப் பெரிய தனிப்பட்ட குற்றம் ஒன்றுக்கு எதிராக, கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டினை மூடி மறைப்பதற்காகவே, மஹிந்த ராஜபக்ஷவுக்கு மு.காங்கிரஸ் ஆதரவு வழங்க நேரிட்டது என்று, அந்தக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் இன்று ஞாயிற்றுக்கிழமை ‘வசந்தம்’ தொலைக்காட்சியில் இடம்பெற்ற ‘அதிர்வு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவித்தார்.
ஆயினும்,” மஹிந்த ராஜபக்ஷவுடன் மு.காங்கிரஸை பசீர்தான் கொண்டு சேர்த்தார்” என்று, பலர் தன்னைக் குற்றம் சாட்டி வருவதாகவும், மு.கா. தலைவர் ஹக்கீமுக்காக, அந்தச் சேற்றினை தான் பூசிக் கொண்டதாகவும் தவிசாளர் பசீர் மேலும் கூறினார்.
இதேவேளை, மு.காங்கிரசின் தலைவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால், அவர் சிற்றூழியர் வேலையொன்றினைக் கூட, பெற்றுக் கொள்வதற்கான தகுதியினை இழந்து விடுவார் எனவும் பசீர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், தனக்கு எதிராக கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் 2005ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குறித்த முறைப்பாட்டிலிருந்து காப்பாற்றிய மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்த ரஊப் ஹக்கீம், பின்னர் மாறு செய்ததாகவும் பசீர் தெரிவித்தார்.
ஆயினும், அந்தத் தேர்தலில் மஹிந்த வெற்றி பெற்றவுடன் ஹக்கீமை பழிவாங்க முயற்சித்ததாகவும், அதன்போது மஹிந்தவுடன் தான் கெஞ்சிப் பேசி, ஒரு சமரசத்துக்கு வந்ததாகவும் பசீர் சேகுதாவூத் விபரித்துக் கூறினார்.