திருடா, வாகனத் திருடா: நாடாளுமன்றில் விமலுக்கு நேர்ந்த அவமானம்

🕔 January 24, 2017

Wimal - 074நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை,  “திருடா வாகனத் திருடா” என்று ஆளுந்தரப்பினர் கோஷமிட்டு அவமதித்த சம்பவம் இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் இடம்பெற்றது.

கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சராகப் பதவி வகித்த போது, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்குரிய 40 வாகனங்களை, தனது உறவினர்களுக்கும் கட்சியினருக்கும் வழங்கினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ச, தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆயினும், நீதிமன்றின் அனுமதியுடன் இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளும் பொருட்டு, விமல் வீரவன்ச சபைக்குச் சமூகமளித்திருந்தார்.

இந்த நிலையில், விமல் வீரவன்ச நாடாளுமன்றில் உரையாற்றினார். இதன்போதே; “வானத் திருடன், இன்னுமொரு திருட்டைப் பற்றிப் பேசுகிறான்”, “திருடா, வாகனத் திருடா”, “சிறையில் இருக்க வேண்டிய நீ, எப்படி இங்கே வந்தாய்” என்று ஆளுந்தரப்பினர் கூச்சலிட்டனர்.

இதன்போது, தன்மீது இவ்வாறானதொரு குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கு, நீதிமன்றில் இருப்பதால், அதுபற்றிப் பேச வேண்டாம் என்று விமல் கூறினார். ஆயினும் கூச்சல் நிற்கவில்லை.

அதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த விமல்; “எனது வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் உள்ளது, எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என கூறுங்கள்” என்று சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்