சல்மான் வெட்டிய காய்: தேசியப்பட்டியல் தொடர்பில் உலவும் இரண்டு கதைகள்

🕔 January 19, 2017

Hakeem+Salman - 098– அஹமட் –

முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வகிக்கும் எம்.எச்.எம். சல்மான், தனது பதவியை ராஜிநாமா செய்வதற்கு மறுத்து விட்டார் என்று மு.கா. வட்டாரங்களில் பேசப்படுகிறது.

கட்சியின் செயலாளர் நாயகம் ஹசனலிக்கு தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சல்மான் வகிக்கும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை ராஜிநாமா செய்யுமாறு ஹக்கீம் வேண்டுகோள் விடுத்ததாகத் தெரியவருகிறது.

சல்மான் ராஜிநாமா செய்வதன் மூலம் உருவாகும் வெற்றிடத்துக்கே, ஹசனலியை நியமிப்பதற்கு ஹக்கீம் முடிவு செய்திருந்தார்.

எவ்வாறாயினும், மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் ‘வெட்டி விட்டார்’ என்றும், இதன் மூலம் இன்னுமொரு ஹுசைன் பைலாவாக சல்மான் மாறிவிட்டார் எனவும், கட்சிக்குள் பேசப்படுகிறது.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை தனது நம்பிக்கைக்குரியவர்களிடம் தற்காலிகமாக கொடுத்து வைத்துள்ளதாகவும், தான் கோரும்போது, அவர்கள் ராஜிநாமா செய்வார்கள் என்றும், மு.கா. தலைவர் ஹக்கீம் பகிரங்கமாகத் தெரிவித்து வந்தார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே, சல்மானை ராஜிநாமா செய்யுமாறு ஹக்கீம் கோரிய போதும், சல்மான் அதற்கு மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இது – மு.கா. தலைவருக்கு பாரிய அவமானத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள போதிலும், இவ்விடயத்தினை வெளியில் சொல்ல முடியாத நிலையில் ஹக்கீம் உள்ளார் என்றும், கட்சியின் உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனது நம்பிக்கைக்குரியவர், தனது நெருங்கிய சகா என்று இதுவரை காலமும் ஹக்கீம் கூறி வந்த சல்மான், இவ்வாறாதொரு ‘காயை’ ஹக்கீமுக்கு வெட்டுவார் என்று, ஹக்கீம் எதிர்பார்த்திருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இன்னொருபுறம், சல்மானின் தேசியப்பட்டியல் தொடர்பில் வேறு கதையொன்றும் உலவுகிறது.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை சல்மான் பாரமெடுக்கும் போது, இரண்டரை வருடங்களின் பின்னர்தான் திரும்பவும் கையளிப்பேன் என்று ஹக்கீமிடம் கூறியிருந்தாராம்.

இதற்கு இணக்கம் தெரிவித்தே, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை சல்மானுக்கு ஹக்கீம் வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆயினும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை சல்மானுக்கு தற்காலிகமாவே தான் வழங்கியதாக ஹக்கீம் கூறி வருகின்றமையானது, கட்சியின் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் ஏமாற்றுகின்றதொரு செயற்பாடாகும் எனவும் கட்சியின் உள்ளகத் தரப்புகள் தெரிவிக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்