கவலைக்குரிய செய்தி

🕔 January 17, 2017

Article - MTM - 087– முகம்மது தம்பி மரைக்கார் –

பெப்ரவரி 12ஆம் திகதியன்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு, கொழும்பில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனாலும், 12 ஆம் திகதி அவ்வளவு சந்தோசமானதாக, மு.கா தலைவருக்கு இருக்குமா என்கிற சந்தேகங்கள் பரவலாக உள்ளன. கட்சிக்குள் உச்சம் பெற்றுவரும் பிரச்சினைகள் இந்த சந்தேகத்தினை வலுப்படுத்துகின்றன.

‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ என்கிற தலைப்பில், கடந்த வாரம் ஒரு புத்தகம் வெளியாகியிருக்கிறது. மு.காவின் தலைமையகமான தாருஸ்ஸலாம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து, இதுவரை காலமும் கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டுக்களை மையமாக வைத்து, பல்வேறு ஆவணங்களைப் பின்னிணைப்புகளாகக் கொண்டு, இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.  மு.காவின் முக்கியஸ்தர்கள், சமூகத்திலுள்ள புத்திஜீவிகள், சட்டத்தரணிகள் மற்றும் சமயப் பெரியார்கள் என்று, பல்வேறுபட்ட தரப்பினருக்கும் இந்தப் புத்தகம் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளன.

முஸ்லிம் காங்கிரஸுக்கு வருமானம் ஈட்டிக்கொள்வதற்காக, அந்தக் கட்சியின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பினால் உருவாக்கப்பட்ட ‘யுனிட்டி பில்டர்ஸ் பிரைவட் கம்பனி’ மற்றும் கட்சியின் சொத்துகளைப் பராமரிப்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட ‘லோட்டஸ் நம்பிக்கை நிதியம்’ ஆகியவற்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பிலும், மேற்படி புத்தகத்தில் பல்வேறு ஆவணங்களை முன்வைத்து தகவல்கள் பதியப்பட்டுள்ளன. இந்தப் புத்தகம் வெளியாகியமையினை அடுத்து, அரசியல் அரங்கிலும் அதற்கு வெளியிலும் பலமான அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இணையத்தளங்களிலும் ‘பேஸ்புக்” வலைத்தளத்திலும் இந்தப் புத்தகம் பற்றிய பதிவுகளைக் கணிசமாகக் காண முடிகிறது.

ஞாயிற்றுக்கிழமையன்று, புத்தளத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், இந்தப் புத்தகம் குறித்து, தன்னுடைய அதிருப்தியினை வெளியிட்டிருந்தார். குறித்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எவ்வித அடிப்படைகளும் அற்றவை என்று அவர் தெரிவித்தார்.  மேலும், கட்சிக்குள் இருப்பவர்கள்தான், இந்தப் புத்தகத்தினை வெளியிட்டுள்ளதாகவும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார். மேற்படி புத்தகத்தில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் தொடர்பிலும் ஏராளமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘தாருஸ்ஸலாம் மீட்பு முன்னணி’ என்கிற பெயரில் உள்ள அமைப்பொன்றினால் இந்தப் புத்தகம் வெளியிட்டுள்ளது. ஆனாலும், இந்தப் புத்தகத்தின் உருவாக்கத்துக்குப் பின்னாலுள்ள பலமான கரங்கள் குறித்து அனுமானிப்பது, கட்சியிலுள்ளவர்களுக்கு அத்தனை கடினமானதாக இருக்க முடியாது.

எவ்வாறாயினும், அந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு உள்ளதாக, கட்சியின் முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர்.  தன்மீதான குற்றச்சாட்டுகளை வெறுமனே வார்த்தைகளால் மு.கா தலைவர் தட்டிக்கழித்து விட்டுப் போக முடியாது என்றும், மு.கா தலைவர் அப்படிச் செய்தால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் வலுப்பெற்று விடுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகி விடுமெனவும் கட்சிக்குள் இருப்பவர்கள் கருத்து வெளியிடுகின்றனர்.

இதேவேளை, ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் மேற்படி புத்தகத்தில், கிழக்கு மாகாண முதலமைச்சரும் மு.காவின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் மீதும் பாரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.  மு.காவின் கம்பனி, நம்பிக்கை நிதியம் மற்றும் தலைமையகமான தாருஸ்ஸலாம் ஆகியவற்றினை மோசடியாக, ஹாபிஸ் நஸீர் கையகப்படுத்தியதாகவும் அதன் மூலம் அவர் பெருந்தொகை நிதியினை ஈட்டிக் கொண்டார் என்றும் அந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதனை நிரூபிக்கும் வகையில் உத்தியோகபூர்வமானவை என்றும் சட்டபூர்வமானவை எனவும் நம்பப்படும் பல ஆவணங்களும் அந்தப் புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளன.  எனவே, ஹாபிஸ் நஸீரும் தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு எழுத்து மூலம் விளக்கமளிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பில் உள்ளதாக, பலரும் கருத்து வெளியிடுகின்றனர்.

குறித்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் பாரதூரமானவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட மு.கா தலைவர் ஹக்கீம், தன்னுடன் கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலியையும் அழைத்துச் சென்றிருந்தார். இது அதிக கவனத்துக்கு உள்ளானது. “ஹசன் அலியுடனான பிரச்சினையைப் பெரிதுபடுத்திக் கொண்டு, கட்சிக்குள் பாரிய குழப்பத்தினை ஏற்படுத்துவதற்கு முயற்சித்த வெளிச்சக்திகளுக்கு, ஹசன் அலியின் புத்தளம் வருகை, பாரிய இடியாக அமைந்து விட்டது” என்று, மு.கா தலைவர் ஹக்கீம் புத்தளத்தில் வைத்துக் கூறினார். எவ்வாறாயினும், ஹசன் அலியுடன் ஏற்பட்ட பிரச்சினைக்கு இன்னும் தீர்வுகள் காணப்படவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மு.கா செயலாளர் நாயகம் ஹசன் அலிக்கும் கட்சித் தலைவர் ஹக்கீமுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு, இரண்டு வாக்குறுதிகளை ஹசன் அலிக்கு மு.கா தலைவர் வழங்கினார். ஒன்று: உடனடியாக ஹசன் அலிக்குத் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவது. இரண்டு: அடுத்த பேராளர் மாநாட்டின் மூலமாக, கட்சியின் அதிகாரம் கொண்ட செயலாளர் பதவியினை ஹசன் அலிக்கு வழங்குதல் ஆகியவையாகும்.

இதன் பிரகாரம், டிசெம்பர் மாதம் 16 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் வைத்து, பிரச்சினைகளைச் சமரசமாக முடித்துக் கொள்வதற்கு உடன்பாடு காணப்பட்டது.  இந்த நிலையில், அங்கு வைத்து முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச். எம். சல்மான் ராஜினாமா செய்யும் பொருட்டு எழுதிய கடிதத்தின் பிரதியொன்றினை, ஹசன் அலியிடம் மு.கா தலைவர் வழங்கினார். சல்மான் ராஜினாமாச் செய்வதனூடாக ஏற்படும் பதவி வெற்றிடத்துக்கே, ஹசன் அலியை நியமிப்பதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஒன்பதாம் திகதி மு.கா.தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் ராஜினாமாச் செய்வார் என்றும், அதனையடுத்து ஹசன் அலி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும், அப்படியெதுவும் நிகழவில்லை. இதனையடுத்து, மறுநாள் 10 ஆம் திகதி மாலை, மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமை, ஹசன் அலி சந்தித்துப் பேசினார். இதன்போது, 16 ஆம் திகதி திங்கட்கிழமை (நேற்றைய தினம்) நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் ராஜினாமா செய்வார் என்றும், அன்றைய தினமே ஹசன் அலி பதவியேற்க முடியும் என்றும் ஹசன் அலிக்கு மு.கா தலைவர் உறுதியளித்தார் என்று அறிய முடிகிறது.

ஆயினும், சல்மான் ராஜினாமாச் செய்யும் வெற்றிடத்துக்கு, அதேநாளில் ஹசன் அலியை நியமித்து, அவரைப் பதவியேற்கச் செய்ய முடியும் என்பதற்கான சாத்தியங்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. அப்படியென்றால், மீளவும் ஒரு தடவை ஏமாற வேண்டிய நிலை, ஹசன் அலிக்கு ஏற்படக் கூடும்.

இதேவேளை, பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள மு.காவின் பேராளர் மாநாட்டிலும், அதற்கு முன்பு இடம்பெறும் கட்சியின் கட்டாய உயர்பீடக் கூட்டத்திலும் பல்வேறு விதமான பலப் பரீட்சைகளும் ‘வெட்டுக் குத்து’களும் இடம்பெறலாம் என்று, கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பேசிக் கொள்கின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலியுடன் மு.கா தலைவர் ஹக்கீம், இப்போதைக்கு ஒரு சமரச நடவடிக்கையின் பொருட்டு இணங்கிப் போனாலும், அதிகாரம் மிக்கதொரு செயலாளர் பதவியில் ஹசன் அலியை அமர்த்துவதற்கு ஹக்கீம் விரும்ப மாட்டார் என்றுதான் கட்சிக்குள் கூறப்படுகிறது. ஹசன் அலியுடன் ஏற்பட்ட பிரச்சினைகளின் போது, ஹக்கீமுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும் அவநம்பிக்கைகளும் இதற்குக் காரணமாக அமையலாம்.  எனவே, எதிர்வரும் பேராளர் மாநாட்டில், ஹசன் அலியை அதிகாரமற்றதொரு பதவியில் அமர்த்தும் முயற்சிகள் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள்தான் அதிகமாக உள்ளன. கட்சியின் கடந்த உயர்பீடக் கூட்டத்தின் போது, இந்த சந்தேகத்தினை வலுப்படுத்தும் வகையில் மு.கா தலைவர் ஹக்கீம் கருத்தொன்றினைத் தெரிவித்திருந்தார். அதாவது, ஹசன் அலிக்கு அதிகாரம் மிக்க செயலாளர் பதவியினைத் தான் வழங்க முடியாது என்றும், அதனை எதிர்வரும் பேராளர் மாநாட்டில், கட்சியின் பேராளர்கள்தான் தீர்மானிப்பார்கள் எனவும் ஹக்கீம் கூறியிருந்தார்.

கட்சியின் உயர்பீடத்திலும் ஏனைய சபைகளிலும், மு.கா தலைவர் ஹக்கீமுக்கு அதிகபட்ச ஆதரவு உள்ளதாக நம்பப்படுகிறது. எனவே, அந்த ஆதரவினூடாக ஹசன் அலியை அதிகாரமற்ற கதிரையொன்றுக்குத் தள்ளிவிடுவதற்கான பலம், ஹக்கீமுக்குக் கிடைக்கும் என்பது ஒரு தரப்பாரின் வாதமாகும்.

எவ்வாறாயினும், முஸ்லிம் காங்கிரஸின் யாப்பின் அடிப்படையில், கட்சிக்குள் இருக்கும் பெரும்பான்மையினை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட முடியாது. ‘மசூறா’ என்கிற கலந்தாலோசனையின் அடிப்படையில்தான் தீர்மானங்கள் எட்டப்பட வேண்டும் என்று, கட்சியின் யாப்புக் கூறுகிறது. இதன்பொருட்டு கட்சிக்குள் ‘மசூறா சபை’ ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த சபையின் தீர்மானங்களின் அடிப்படையில்தான் முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்றும் யாப்பில் கூறப்பட்டுள்ளது. சிலவேளைகளில், கட்சியின் பெரும்பான்மைக் கருத்துக்கு எதிராகவும் ‘மசூறா சபை’யின் முடிவுகள் அமையலாம். கட்சியின் பெரும்பான்மைக் கருத்துகளை விடவும், மசூறா சபையின் முடிவுகள்தான் கட்சி யாப்பின்படி வலுவுடையவையாகும்.

இப்படியானதொரு சூழ்நிலையில், எதிர்வரும் பேராளர் மாநாட்டில் அங்கிகாரம் பெற வேண்டிய தீர்மானங்கள், அதற்கு முந்தைய நாள் இடம்பெறும் கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும். அதன்போது, கட்சியின் அதிகாரம் மிக்க செயலாளர் பதவிக்கு ஹசன் அலியின் பெயரைப் பிரேரிப்பதற்கு ஒரு சாரார் தயாராக உள்ளனர்.  இதேவேளை, ஹசன் அலிக்கு அந்தப் பதவி கிடைத்து விடக்கூடாது என்பதற்காக, வேறு ஒருவர் அல்லது பலரின் பெயர்களைப் பிரேரிப்பதற்கு மற்றொரு தரப்பார் தயாராக உள்ளனரெனவும் அறிய முடிகிறது. இவ்வாறானதொரு நிலையில், அதிகாரம்மிக்க செயலாளர் பதவிக்கு யார் பொருத்தமானவர் என்பதை ‘மசூறா சபை’ தீர்மானிக்கும்.  மசூறா சபையின் தலைவராக கலீல் மௌலவி பதவி வகிக்கின்றார். இவரை கடந்த வருடம் கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும், கட்சியில் வகிக்கும் ஏனைய அனைத்துப் பதவிகளிலிருந்தும் மு.கா தலைவர் ஹக்கீம் இடைநிறுத்தியிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது. பின்னர், அந்த இடைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளராகப் பதவி வகிக்கும் பஷீர் சேகுதாவூத்தையும் அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு மு.கா தலைவர் ஹக்கீம் முயற்சிகளை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.  கட்சியின் கடந்த உயர்பீடக் கூட்டத்தில், இந்த விடயத்தினை, பட்டும் படாமலும் மு.கா தலைவர் கூறியிருந்தார்.  அதாவது, “தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத்தை அகற்றுவதற்குப் பல தடவை நான் முயற்சித்த போதும், அதனை கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தடுத்து விட்டார்” என்று, மு.கா தலைவர் ஹக்கீம் கடந்த உயர்பீடக் கூட்டத்தில் கூறினார்.

எனவே, எதிர்வரும் பேராளர் மாநாட்டில் பஷீர் சேகுதாவூத்தை பதவியிறக்கம் செய்வதற்கு, ஹக்கீம் முயற்சிப்பார் என்கிற சந்தேகம் கட்சிக்குள் பரவலாக உள்ளது.  ஆனால், பஷீரை அத்தனை சுலபமாக அகற்ற முடியுமா என்கிற கேள்விகளும் உள்ளன. மு.கா தலைவரின் பலவீனங்கள் தொடர்பிலான பல்வேறு ஆதாரங்கள், பஷீர் சேகுதாவூத்திடம் சிக்கிக் கிடக்கின்றன என்று கட்சிக்குள் ஒரு கதை உள்ளது.  எனவே, பஷீரைப் பழி தீர்ப்பதற்கு ஹக்கீம் முயற்சிப்பது, ஹக்கீமுக்கு ஆரோக்கியமாக அமையாது என்று கூறப்படுகிறது. எனவே, அவ்வாறானதொரு விசப் பரீட்சையில் ஹக்கீம் குதிக்க மாட்டார் என்று, கட்சியின் உயர்பீடத்தைச் சேர்ந்த ஒரு தரப்பார் கூறுகின்றனர்.

அதேபோன்று, கட்சித் தலைவர் தெரிவிலும் சவாலான நிலைவரங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் சிலருடன் பேசிய போது, இந்த விடயத்தினை அறிந்து கொள்ள முடிந்தது.  இதுவரை காலமும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தேர்வின் போது, ஏகோபித்த முடிவின் பிரகாரமே ரவூப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டு வந்தார். அவருக்குப் போட்டியாக, வேறு எவருடைய பெயரும் தலைமைப் பதவிக்கு இதுவரை பிரேரிக்கப்பட்டதில்லை. ஆனால், “இம்முறை தலைவர் பதவிக்காக ஹக்கீமுடைய பெயர் பிரேரிக்கப்படும் போது, வேறு சிலரின் பெயர்களையும் பிரேரிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகிறது. இதன்போது தலைவர் பதவிக்குப் பொருத்தமானவர் யார் என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு ‘மசூறா சபை’யிடம் வழங்கப்படும். அப்படி நடப்பதே ஹக்கீம் மீது கட்சிக்குள் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கப் போதுமானதாகும்” என்கிறார் கட்சியின் மூத்த உயர்பீட உறுப்பினர் ஒருவர்.

இவை எல்லாவற்றினையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடும், அதற்கு முன்னுள்ள நாட்களும் கொதி நிலை கொண்டவையாகவே இருக்கப் போகின்றன என்பதை அனுமானிக்க முடிகிறது.

முஸ்லிம் காங்கிரஸுக்குள் நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் மறைந்திருந்து தாக்கும் கெரில்லா யுத்தம், பெப்ரவரி 12 ஆம் திகதி நடைபெறும் பேராளர் மாநாட்டிலும் அதற்கு முன் தினமுள்ள கட்டாய உயர்பீடக் கூட்டத்திலும் நேரடி யுத்தம் நடைபெறுகின்ற ஒரு மரபுப் போராக மாறும் நிலை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் மிக அதிகபட்சமாக இருப்பதாகவே தெரிகிறது.

அப்படி, நடக்கக் கூடாதவை நடந்து விட்டால், இன்னுமொரு பிளவு மு.காவுக்குள் நிகழ்வதைத் தடுக்க முடியாது போய் விடும்.

ஆனால், அப்படியொரு பிளவினைத் தாங்கும் நிலையில் கட்சி இல்லை என்பதுதான் இங்குள்ள கவலைக்குரிய செய்தியாகும்.

நன்றி: தமிழ் மிரர் (17 ஜனவரி 2017)

Comments