கிராமத்துக்கு ஒரு வேலைத் திட்டத்தினை வைத்துக் கொண்டு, யாரும் அரசியல் செய்ய முடியாது: ஹசன் அலி

🕔 January 9, 2017
hasan-ali-011– எம்.ஜே.எம். சஜீத் –

கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் ஒரு பொதுவான அபிவிருத்தித் திட்டமாகும். இதனை வைத்துக்கொண்டு சிலர் அரசியல் செய்வதற்கு முயற்சிக்கின்றனர் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹஸன் அலி குற்றம் சுமத்தியுள்ளார்.

கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்ட அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேச அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

“எமது நாட்டிலுள்ள சகல கிராமங்களையும் அபிவிருத்தி செய்யும் நோக்குடன் கிராமத்துக்கு ஒரு மில்லியன் ரூபா நிதியினை அரசாங்கம் ஒதுக்கீடு செய்து வருகிறது. குறிப்பாக கிராம மக்களினால் முன்னுரிமைப்படுத்தப்படுகின்ற தேவைகள்தான் இத்திட்டத்தினூடாக நிறைவேற்றிக்கொள்ளப்படுகின்றது.

இவ்வாறான விசேட திட்டத்தினால் அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளை  மேற்கொள்ளும் போது, அதனைத் திறந்து வைப்பதற்கு அரசியல்வாதிகள் முன்டியத்துக்கொண்டு வருகின்றனர். தங்களுடைய அபிவிருத்திப்பணிகள் போன்று இவற்றினைச் சித்தரித்து அரசியல் செய்வதற்கு முயற்சிக்கின்றனர். மேலும் அவர்கள் இவ்வபிவிருத்தி திட்டப் பெயர்ப்பலகைகளில் தங்களது போட்டோக்களையும், பெயரினையும் குறிப்பிடுவதற்கும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப்பணிகளுக்கு எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அரசியல்வாதியோ உரிமை கோர முடியாது. இது அரசாங்கத்தின் பொதுவானதொரு திட்டமாகும். இதற்குரிய சகல உரித்தும் நல்லாட்சி அரசாங்கத்துக்கே உரியது. இதனை வைத்துக்கொண்டு அரசியல் லாபம் தேடுவதற்கும் எமது பிரதேச அரசியல்வாதிகள் முற்படுகின்றனர்.

ஜனாதிபதி பதவியேற்று இரண்டாவது வருட பூர்த்தியினை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேசத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது சம்மாந்துறை பிரதேசத்தில் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளும் திறந்து வைக்கப்பட்டன.

கிரமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தினூடாக சம்மாந்துறைப் பிரதேசத்தில் சுமார் 50 கிராம சேவகர் பிரிவிலும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனூடாக மக்கள் பெரிதும் நன்மையடைந்துள்ளனர். எனவே இவ்வாறான திட்டங்களை மேற்கொண்ட நல்லாட்சி அரசாங்கத்துக்கும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு நாம் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

குறிப்பாக பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்பட்ட இவ்வபிவிருத்திப் பணிகளை, ஏதோ ஒரு வகையில் திறந்து வைப்பதில் நாம் மகிழ்ச்சியடைந்தாலும். இதனை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்