உயர்பீடக் கூட்டத்தில் நாடகமொன்று அரங்கேறத் தயார்: பின்னணியில் ஹக்கீம் இருப்பதாக தகவல்கள் கசிவு

🕔 January 1, 2017

hasanalihakeem-086– அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அட்டாளைச்சேனை மற்றும் வன்னிப் பிரதேசங்களைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள், தமது பிரதேசங்களுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைக் கோரி, உயர்பீடக் கூட்டத்தில் கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர் என கட்சியின் உள் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

அட்டாளைச்சேனை மற்றும் வன்னி பிரதேச உயர்பீட உறுப்பினர்களை இவ்வாறு தூண்டி விடுவதன் பின்னணியில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மு.காங்கிரசின் செயலாளர் நாயகம் ஹசனலிக்கும், கட்சித் தலைவர் ஹக்கீமுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த முரண்பாட்டினை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், ஹசனலிக்கு உடனடியாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதாக ஹக்கீம் வாக்களித்திருந்தார். ஆயினும், இந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் விடுவதற்காவே, அட்டாளைச்சேனை மற்றும் வன்னி ஆகிய பிரதேசங்களின் உயர்பீட உறுப்பினர்களை – எதிர்வரும் கூட்டத்தில் தேசியப்பட்டிலைக் கோரி பிரச்சினைகளை ஏற்படுத்துமாறு ஹக்கீம் பணித்துள்ளார் என்று, கட்சியின் சில முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர்.

“அட்டாளைச்சேனையும், வன்னியும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினைக் கோருவதால், இப்போது உங்களுக்கு தேசியப்பட்டியலைத் தர முடியாது” என்று, ஹசனலிக்கு ஹக்கீம் கூறத் தீர்மானித்துள்ளார் என்றும் அறிய முடிகிறது.

எவ்வாறாயினும், ஹக்கீம் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடும் என்று, ஏற்கனவே ஹசனலியிடம் அவருக்கு நெருக்கமான பலர் எச்சரித்திருந்ததனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஹசனலியை ஹக்கீம் இவ்வாறு ஏமாற்ற முயன்றால், கட்சியின் அதிகாரம் மிக்க செயலாளர் யார் என்பது குறித்து,  தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மீண்டும் ஹசனலி செல்ல முடியும்.

ஹக்கீமுடன் ஹசனலி தற்காலிக சமரசமொன்றுக்கு வந்துள்ளபோதும், கட்சியின் அதிகாரம் மிக்க செயலாளர் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஹசனலி செய்துள்ள முறைப்பாட்டினை, இதுவரை எழுத்து மூலம் வாபஸ் பெறவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்