வீதியில் கிறிக்கட் விளையாடிய சிறுவன், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எச்சரிக்கையுடன் விடுதலை

🕔 July 1, 2015

Street cricket - 02வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறினை ஏற்படுத்தும் வகையில், வீதியில் கிறிக்கட் விளையாடிய சிறுவனொருவனை, எச்சரித்த பின்னர் – கொழும்பு மஜிஸ்ரேட் நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே விடுதலை செய்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது;

வாகனங்களுக்கும், நடைபாதையில் செல்வோருக்கும் இடைஞ்சலை ஏற்படுத்தும் வகையில், கொழும்பு – 02, வொக்சல் வீதியில் – கிறிக்கட் விளையாடிய சிறுவனொருவனை, கொம்பனித்தெரு பொலிஸார் கைது செய்து, கொழும்பு மஜிஸ்ரேட் நீதவான்  நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

இதன்போது, குறித்த சிறுவன் தனது குற்றத்தினை மன்றில் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, இவ்வாறான குற்றச் செயலில் மீண்டும் ஈடுபடக் கூடாது எனும் எச்சரிக்கையுடன்,

கொழும்பு மஜிஸ்ரேட் நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே – சிறுவனை விடுதலை செய்தார்.

இவ் விடயம் குறித்து பொலிஸார் தெரிவிக்கையில்; ‘தண்டனையொன்றினை வழங்கும் வகையிலான குற்றமொன்றினை குறித்த சிறுவன் புரிந்துள்ளார். இதே குற்றத்தினை வயது வந்த ஒருவர் செய்திருந்தால், அவருக்கு 05 ஆயிரம் ரூபாவில் இருந்து 50 ஆயிரம் ரூபா வரையிலான தண்டப் பணம் விதிக்கப்பட்டிருக்கக் கூடும்’ என்றனர்.

வீதியில் கிறிக்கட் விளையாடிய மேற்படி சிறுவன் – கொழும்பு 02 இல் வசிப்பவராவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்