638 தடவை கொலை முயற்சியிலிருந்து தப்பித்த பிடல் காஸ்ட்ரோ, இயற்கையாக மரணித்தார்

🕔 November 26, 2016

fidel-castro-013கியூபாவின் புரட்சியாளரும், அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியுமான ஃபிடல் காஸ்ட்ரோ, தனது 90 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை மரணமடைந்தார்.

கடந்த பல மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மறைந்த தகவலை, கியூபாவின் அரசு தொலைக்காட்சி வெளியிட்டது.

கியூபா நேரப்படி 22.29 மணிக்கு ஃபிடல் காஸ்ட்ரோ உயிர் பிரிந்ததாக, அந்நாட்டின் ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோ தொலைக்காட்சியில் தோன்றி தகவல் வெளியிட்டார்.

கியூபாவில் புரட்சியை வழிநடத்திய ஃபிடல் காஸ்ட்ரோ, 1959 முதல் 1976 வரை அந்நாட்டின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை அதிபராகவும் இருந்தவர். 49 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்தவர், 2008-ல் பதவியிலிருந்து விலகினார். நீண்ட காலம் ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் என்ற பெருமைகுரியவர் ஃபிடல் காஸ்ட்ரோ.

கொலை முயற்சி

அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவைக் கொலை செய்ய அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏ 638 முறை முயற்சித்திருந்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் சிஐஏ உளவு நிறுவனம், கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவை தீர்த்துக் கட்டுவது ஒன்றே வழி என்று முடிவு செய்து, தொடர்ந்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டது.

நாட்டு மக்களுடன்  ஃபிடல் காஸ்ட்ரோ அவ்வப்போது வானொலியில் உரையாற்றுவார். அப்போது அவர் பேசும் மைக்கில் ரசாயன பவுடரை தூவலாமா என்று கேட்டு சிஐஏ அதிகாரி, தன்னுடைய உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதம் மூலம் தெரிய வந்தது. ஆனால் அந்த யோசனையை செயல்படுத்தவில்லை.

மேலும், அவர் புகைக்கும் சுருட்டுக்குப் பதிலாக விஷச் சுருட்டை மாற்றி வைத்துக் கொல்லவும் முயற்சி நடந்தது.

அவரது காலணியில் விஷ ரசாயனத்தை தெளிக்கவும், விமான விபத்தை ஏற்படுத்தி கொல்லவும் சிஐஏ முயற்சித்தது.

கார் விபத்தை ஏற்படுத்திக் கொல்ல திட்டம் வகுக்கப்பட்டு, கியூபாவைச் சேர்ந்த ஒரு நபரை மூளைச் சலவை செய்து தயார் செய்தனர். ஆனால், அந்த திட்டம் நிறைவேறவில்லை.

இதுபோல நூற்றுக்கணக்கான கொலை முயற்சி சதியை சிஐஏ திட்டமிட்ட போதும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்தால் நிறைவேறாமல் போனது.

கொல்லத் துணிந்த காதலி

இறுதியாக ஃபிடல் காஸ்ட்ரோவின் காதலியை வைத்து கொலை செய்ய சிஐஏ திட்டமிட்டு, அவரை சம்மதிக்கவும் வைத்தது.

இது பற்றி அறிந்து கொண்ட ஃபிடல் காஸ்ட்ரோ, தனது காதலியின் கையிலேயே துப்பாக்கியைக் கொடுத்து தன்னை மறைமுகமாக வஞ்சித்துக் கொல்ல வேண்டாம், துப்பாக்கியால் சுட்டு – வீர மரணத்தைக் கொடு என்று கேட்டுக் கொண்டார். துப்பாக்கியை வீசி எறிந்து விட்டு, கதறி அழுதார் அவரது காதலி.

இதுபோல ஃபிடல் காஸ்ட்ரோவைக் கொலை செய்ய வேண்டும் என்று சிஐஏ செய்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. மக்களின் ஏகோபித்த அன்பு, அவரது உயிருக்கு கவசமாக விளங்கியது  என்று சொன்னால் அது மிகையில்லை.

இறுதியாக, வயது முதிர்வு காரணமாக ஃபிடல் காஸ்ட்ரோ இன்று தனது 90வது வயதில் இயற்கை மரணம் எய்தினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்