ஆச்சரியங்களால் சுழலும் வாழ்க்கை

🕔 November 21, 2016

article-mtm-1230
– முகம்மது தம்பி மரைக்கார் –


லகம் விநோதங்களாலும், ஆச்சரியங்களாலும் நிறைந்தது. நம்மைச் சுற்றியுள்ள எல்லாமே ஆச்சரியங்கள்தான். ஆனாலும், அவற்றுடன் நாம் வாழ்ந்து பழகியதால், அவை ஆச்சரியங்களாக நமது கண்களுக்குத் தெரிவதில்லை. இதனால், நாம் பார்க்காதவற்றினை, அறியாதவற்றினை மட்டுமே ஆச்சரியங்கள் என்கிறோம். இன்னொருபுறம் எல்லாமும், எல்லோருக்கும் ஆச்சரியங்களாகத் தெரிவதில்லை.

ஆனாலும், அவ்வப்போது நடக்கும் சில விடயங்கள், ஒட்டு மொத்த உலகத்துக்கும் ஆச்சரியமான சமாச்சாரமாக இருந்து விடுகின்றன. இப்படியெல்லாம் நடக்குமா என்று, நாம் கண்களை அகல விரித்துப் பார்க்கத் தொடங்குகிறோம்.-

ஆச்சரியம் – 01

தாய்லாந்து ஆசாமியொருவர் தேர்வு செய்துள்ள வாழ்க்கை விநோதமானது. அதனால், உலகம் அவரை ஆச்சரியமாகப் பார்க்கிறது. அவர் ஒரு இளைஞர். அவரின் பெயர் வெளியிடப்படவில்லை. 10 அடி நீளமான நாகப் பாம்பு ஒன்றுடன் ஆசாமி ‘குடும்பம்’ நடத்துகிறார்.

ஆசாமிக்கு ஒரு காதலி இருந்தார். ஆனால், 05 வருடங்களுக்கு முன்னர் அவர் இறந்துவிட்டார். அதற்குப் பிறகு மிகவும் சோகத்துடன் காலத்தைக் கடத்தி வந்த இவர், அந்த 10 அடி நீளமான நாகப் பாம்பினை ஒரு நாள் கண்டிருக்கிறார். இதற்குப் பிறகு நடப்பவைதான் புதினங்கள்.

பாம்பின் முகச் சாயல் அந்த ஆசாமிக்கு அவரின் காதலியின் முகத்தை ஞாபகப்படுத்தியதாம். ‘ஆகா, எனது ஆருயிர் காதலிதான் மறுபிறவியெடுத்து, பாம்பாக வந்திருக்கிறாள்’ என்று ஆசாமிக்கு ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது. ஆசாமி பௌத்த மதத்தைச் சார்ந்தவர். இறந்து போனவர்கள் விலங்குகளாக மறுபிறப்பெடுப்பார்கள் என்று, பௌத்த மதம் கூறுகிறதாம்.

இப்போது, பாம்புடன் ஆசாமி வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார். பாம்புடன் தொலைக்காட்சி பார்ப்பது, பாம்புடன் சந்தைக்குச் செல்வது, பாம்புடன் ஒன்றாக இருந்து சாப்பிடுவது என்று, இவரின் பொழுதுகள் கழிகின்றன. உச்ச கட்டமாக, பாம்பை எதிரப்; பக்கமாக வைத்துக் கொண்டு ஆசாமி கேரம்போட் விளையாடுகின்றார் என்றால் பாருங்களேன்.

‘பாம்பை இப்படி அருகில் வைத்துக் கொண்டிருப்பது ஆபத்தானது. அது எப்போது வேண்டுமானாலும் உன்னைக் கடித்து விடும்’ என்று, ஆசாமிக்கு ஏராளமானோர் அறிவுரை சொல்லியிருக்கிறார்கள். ஆசாமிக்கும் அது தெரியும். ஆனால், அவர் அதைப் பாம்பாகப் பார்க்கவில்லை. தன்னுடைய காதலியாகத்தான் பார்க்கிறார். காதலி கடிப்பது எவ்வளவு கிளுகிளுப்பான சமாச்சாரம்.snake-thailand-011

ஆச்சரியம் – 02

மொரிற்றேனியா (Mauritania) – ஆபிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள ஒரு நாடு. நாட்டின் முழுப் பெயர் மொரிற்றேனிய இஸ்லாமிய குடியரசு. ஆபிரிக்கக் கண்டத்திலுள்ள பெரிய நாடுகளில் 11ஆவது இடத்திலுள்ளது மொரிற்றேனியா. இங்குள்ள மக்கள் கறுப்பர்கள்.

மொரிற்றேனியாவில் ஒரு நம்பிக்கையுள்ளது. பருமனான பெண்களைத் திருமணம் செய்தால், அதிஷ்டமும் – சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்று அங்குள்ளவர்களில் கணிசமானோர் நம்புகின்றனர். அதனால், திருமணமாகவுள்ள பெண்களை, அவர்களின் குடும்பத்தார் ‘உடம்பு வச்சிக்கோ’ என்று வற்புறுத்தப்படுகிறார்களாம். வேறு வழிகளில்லாததால், அதிகமான பெண்கள், இந்த வற்புறுத்தலின் பேரில் தங்களை குண்டாக்கிக் கொள்கின்றனர்.

இதன் விளைவாக, மொரிற்றேனியா பெண்களில் அதிகமானோர் பல்வேறு வியாதிகளுக்கு உள்ளாகின்றனர் என்று கூறப்படுகிறது.

திருமணம் செய்யும் பெண்ணை இப்படி நோயாளியாக்கி விட்டு, வாழ்வில் என்ன அதிஷ்டத்தையும், சௌபாக்கியங்களையும் அங்குள்ள ஆண்கள் கண்டுவிடப் போகிறார்கள் என்று தெரியவில்லை.mauritania-011

ஆச்சரியம் – 03

ஒரு திருமணம் என்றால், நம்மூரில் நல்ல நாள் பார்த்து அந்தத் திருமணத்தை நடத்தி வைப்பார்கள். நல்ல நாள் எது எனத் தீர்மானிப்பதில் ஒவ்வொரு சமூகத்தவர்களிடையேயும் பல்வேறு நடைமுறைகள் உள்ளன.

ஆனால் சீனாவில் ‘டாவுர்’ என்கிற மக்கள் குழுவினர் திருமண நாளை முடிவு செய்யும் நடைமுறை வினோதமானது. முதலில், இரு வீட்டாரும் பேசிக் கதைத்து திருமணத்தை நிச்சயித்துக் கொள்வார்கள். பிறகு திருமணத்துக்கான நாள் ஒன்றினை குறிப்பார்கள். அந்த நாளினை முடிவு செய்வதற்காக அவர்கள் செய்யும் காரியம்தான் வினோதமானது.

ஒரு கோழிக் குஞ்சை எடுப்பார்கள். திருமணம் செய்து கொள்ளவிருக்கும் ஆண் – பெண் இருவரின் கைகளிலும் கத்திகள் கொடுக்கப்படும். அவர்கள் அந்தக் கோழிக் குஞ்சை வெட்டிக் கொல்வார்கள். அத்துடன் விவகாரம் முடிந்து விட்டது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

கொல்லப்பட்ட கோழிக் குஞ்சை பிளந்து, அதன் ஈரலை எடுத்துப் பார்ப்பார்கள். எதுக்கு என்று கேட்கிறீர்களா? கோழியின் ஈரல் நன்றாக இருந்தால், குறித்த தினத்தில் திருமணம் நடப்பதை உறுதி செய்து கொள்வார்கள். ஈரல் நன்றாக இல்லை என்றால், இன்னொரு கோழிக் குஞ்சைக் கொன்று, ஈரலைப் பரிசோதிக்க வேண்டுமாம். அதுக்கு கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டுமாம்.

‘கோழிக்கு குஞ்சு என்னடா பாவம் பண்ணிச்சி’ என்றுதானே கேட்கிறீர்கள். ‘டாவுர்’ மக்களிடம் அப்படியெல்லாம் கேட்கக் கூடாது.

ஆச்சரியம் – 04

உலகில் ஒவ்வொரு நாளும் 21 ஆயிரம் பேர் பட்டினியால் இறக்கின்றார்கள். அதாவது 04 செக்கனுக்கு ஒருவர் எனும் கணக்கில் இந்த மரணம் நிகழ்கிறது. இன்னொருபுறம் 820 மில்லியன் மக்கள் மிக மோசமான பசியினால் உலகம் முழுவதும் அவதியுறுவதாகக் கூறப்படுகிறது. அதாவது உணவு இல்லாமல் பலர் நாளாந்தம் இறந்து கொண்டிருக்கின்றார்கள்.

நிலைமை இப்படியிருக்க, வத்திக்கானிலுள்ள ரோமானியர்கள், இறந்துபோனவர்களுக்கு உணவளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான செய்திதான்.

வத்திகானினுள்ள ரோமானியர்களின் கல்லறைகளில் குழாய்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் குழாய்களின் மறுமுனை கல்லறை மயானத்துக்கு வெளியில் இருக்கின்றன.

குழாயின் மறுமுனையினூடாக சுத்தமான தேன், வைன் மற்றும் உணவு வகைகளை கல்லறைக்கு அனுப்புகின்றார்கள். கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளவர்களுக்காகவே இவை அனுப்பப்படுகின்றனவாம். தாங்கள் அனுப்பும் இந்த உணவுகளை – இறந்தவர்கள் உட்கொள்வார்கள் என்று, அதனை அனுப்புகின்றவர்கள் நம்புகின்றார்கள்.

சில நம்பிக்கைகளும், அதனூடான நடத்தைகளும் எவ்வளவு ஆச்சரியமானவை.

ஆச்சரியம் – 05

யனோமமி (Yanomami) பழங்குடியினர் தென் அமெரிக்காவில் வாழ்கின்றார்கள். மிகச் சரியாகக் சொன்னால் வடக்கு பிரேசில் மற்றும் தெற்கு வெனிசூலா பிரதேசத்திலுள்ள அடர்ந்த காடுகளிலும், மலைகளிலும் இவர்கள் வாழ்கின்றார்கள்.

சுமார் 15 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் யனோமமிகள், ஆசியாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்ததாகக் கூறப்படுகிறது. இப்போது, மொத்தமாக 35 ஆயிரம் யனோமமி பழங்குடியினர் மட்டுமே உலகில் வாழ்கின்றனர்.

யனோமமிகளின் இறுதிச் சடங்கில் நடக்கும் ஒரு நிகழ்வு வினோதமும், ஆச்சரியமும் நிறைந்தது. யனோமமிகளில் ஒருவர் இறந்து விட்டால், அவரை உடனடியாக எரித்து விடுவார்கள். பின்னர், எரிந்த உடலின் சாம்பலை எடுத்து, வாழைமரச் சூப்பில் – அந்தச் சாம்பலைக் கலந்து விடுவார்கள். பிறகு, இறந்தவரின் உறவினர்கள் அந்த சூப்பினை பருகுவார்கள்.

இப்படிச் செய்வதால், இறந்து போன தங்கள் அன்புக்குரியவரின் ஆன்மா, என்றென்றும் தம்முடன் இருக்கும் என்று, யனோமமி பழங்குடியினர் நம்புகிறார்களாம்.yanomami-011

ஆச்சரியம் – 06

இந்தோனேசியாவிலுள்ள டானி (Dani) எனும் பழங்குடியினரின் இறுதிச் சடங்கிலுள்ள நடைமுறையொன்று மிகவும் குரூரமானது. டானி பழங்குடிக் குடும்பத்திலுள்ளவர்கள் யாராவது இறந்து விட்டால், அவர்களின் துயரத்தை வெளிப்படுத்துவதற்காக, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் விரல்களில் சிலவற்றினை வலுக்கட்டாயமாகத் துண்டித்து விடுவார்கள்.

விரல்களைத் துண்டிப்பதற்கு முன்பாக, எல்லா விரல்களையும் சேர்த்து, அவை விறைக்கும் வகையில், இறுக்கிக் கட்டி விடுவார்கள். விறைத்த பின்னர், விரல்களை வெட்டித் துண்டாடுவார்கள். தங்கள் மூதாதையரின் ஆவிகளைத் திருப்திப்படுத்துவற்காகவே டானிகள் இப்படிச் செய்கிறார்களாம்.

விரல்களைத் துண்டிக்கும் இந்தப் பழக்கம் இப்போதும் டானி பழங்குடியினரிடத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவ்வப்போது, அரிதாகவே இந்தப் பழக்கம் இப்போது நடைபெறுவதாகவும் அறிய முடிகிறது.dani-011

ஆச்சரியம் – 07

கூச்சம் பயம் என்பதெல்லாம் உளம் சார்ந்ததொரு விடயமாகும். அசாதாரணமான பயம், கூச்சம் என்பவை உள நோயுடன் தொடர்பான அறிகுறிகளாகும். இவற்றினை சில பயிற்சிகள் மூலம் அல்லது மருந்துகளை உட்கொள்வதன் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

ஆனால் பயம், அச்சம் போன்றவற்றினை குழந்தைப் பருவத்திலேயே இல்லாமலாக்குவதற்காக ஆபிரிக்க பழங்குடியினரினர் ஒரு நடைமுறையினைக் கையாளுகின்றார்கள். இந்த நடைமுறைக்கு ‘சிபுது’ என்று பெயர்.

ஆபிரிக்க பழங்குடி இனத்தில் குழந்தையொன்று கிடைத்து விட்டால், மூன்றாம் நாள், அந்தக் குழந்தையின் உறவினர்கள் குடிசையொன்றின் கீழ் ஒன்று கூடுவார்கள். பின்னர், சிபுது எனும் மரத்திலிருந்து இலைகளைப் பறித்துக் கொண்டு வந்து, அவற்றுக்குத் தீ மூட்டுவார்கள். இலைகள் எரியத் துவங்கும். அப்போது நன்றாக புகைவரும் ஒரு சமயத்தில், குழந்தையைத் தலைகீழாகப் பிடித்து, அதன் தலையை புகைக்குள் கொண்டு செல்வார்கள். புகை காரமானது. அது – குழந்தையின் வாய், மூக்கு, கண்களெல்லாம் புகும். இப்படி நிறையத் தடவை செய்வார்கள்.

இப்படிச் செய்வதால், அந்தக் குழந்தை பயம், கூச்ச சுபாவமில்லாமல் வளரும் என்று, அவர்கள் நம்புகின்றனர்.sifudu-09

இப்படி பல்வேறு விநோதமான நம்பிக்கைகள், நடைமுறைகளால் ஆனதுதான் உலகு. தூர நின்று பார்ப்போருக்கு, இந்த நம்பிக்கைகளும் நடைமுறைகளும் ஏளனமானதாக, மோசமானதாகத் தெரிந்தாலும் கூட, அவர்களளலில் அவை உணர்வுபூர்வமானவையாகும்.

இவ்வாறான பல்வேறுபட்ட நடைமுறைகளாலும், நம்பிக்கைகளாலும், பழக்கவழக்கங்களாலும் நிறைந்திருப்பதனாலேயே உலகம் அழகானதாகத் தெரிகிறது.

உலகம் முழுவதும் ஒன்றுபோல் இருந்தால் – வாழ்க்கை அலுத்துவிடும்.

ஆச்சரியங்களால்தான் வாழ்க்கை சுழன்று கொண்டிருக்கிறது.

நன்றி: தமிழ் மிரர் (17 நொவம்பர் 2016)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்