சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐ.தே.கட்சியைப் பலப்படுத்துகின்றனர்: பீரிஸ் குற்றச்சாட்டு

🕔 November 17, 2016

peiris-01ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதை விடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை முன்னெடுத்துச் செல்லவே சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் செயற்படுகின்றனர் என்று, முன்னாள் அமைச்சரும், இலங்கை பொதுஜன முன்னணி எனும் புதிய கட்சியின் தலைவருமான முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இதேவேளை, நாடு மிகவும் இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கை பொதுஜன முன்னணி எனும் தமது புதிய கட்சி தொடர்பாக விளக்கமளிக்கும் பொருட்டு இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் பீரிஸ் இன்போது மேலும் கூறுகையில்;

“புதிய கட்சியொன்று அவசியமென்பது சகல பிரதேச மக்களினதும் எதிர்பாப்பாகும். அதனை மையமாக வைத்தே புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று அர்த்தமற்ற ஒன்றாகிவிட்டது. மத்திய வங்கியின் பிணை முறி மோசடிக்கு மூலகாரணமாக, பிரதமர் ரணிலே உள்ளாரென்பது அனைவருக்கும் தெரியும். குறித்த மோசடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சகல அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளும் கோரி வருகின்றன.

ஆனால், பிரதமர் ரணிலின் ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இன்று சுதந்திரக் கட்சி உள்ளது. அவர் எடுக்கும் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் நிலையில் உள்ளது. இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதை விடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை முன்னெடுத்துச் செல்லவே ,சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் செயற்படுகின்றனர்” என்றார்.

Comments