புத்தளம் பாயிசுக்கு தேசியப்பட்டியல்; மு.கா. தலைவர் ரகசிய வாக்குறுதி

🕔 November 16, 2016

hakeembaise-0876– அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக, அந்தக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் புத்தளத்தைச் சேர்ந்த கே.ஏ. பாயிஸ் நியமிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக, கட்சியின் உள் வட்டாரங்களிலிருந்து செய்தியொன்று கசிந்துள்ளது.

புத்தளம் பாயிஸ் – முஸ்லிம் காங்கிரசிலிருந்து விலகியிருந்த நிலையில், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய வேண்டுகோளின் பேரில், அண்மையில் அக்கட்சியில் இணைந்து கொண்டார்.

மு.காங்கிரசில் பாயிஸ் மீளவும் இணைந்து கொண்டபோது, எந்தவித நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை என்று வெளியுலகுக்குக் கூறப்பட்டபோதிலும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை பாயிஸ் கோரியிருந்தார் என்று, தலைவர் ஹக்கீமுக்கு நெருக்கமான தரப்பிலிருந்து அறிய முடிகிறது.

மு.காங்கிரசுக்குக் கிடைத்த இரண்டு தேசியப்பட்டியலில் ஒன்றுக்கு, திருகோணமலையைச் சேர்ந்த எம்.எஸ். தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார். மற்றையது சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சல்மானுக்கு வழங்கப்பட்டுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தற்காலிகமானது என்றும், அதை அவரிடமிருந்து பெற்று, சுழற்சி முறையில் சில பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், தற்காலிகமாக வழங்கப்பட்டதாக கூறப்படும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை, கடந்த 15 மாதங்களாக, சல்மான் வகித்து வருகின்றார்.

இந்த நிலையிலேயே, சல்மான் வகிக்கும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை – சுழற்சி முறையில் வழங்கும் போது, அதை புத்தளம் பாயிசுக்கும் வழங்கவுள்ளதாக, மு.கா. தலைவர் ஹக்கீம் உறுதியளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

தனது அரசியல் எதிராளியான அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அரசியல் களமான புத்தளத்தில், அவரை நேரடியாக எதிர்ப்பதற்கு பாயிஸ் பொருத்தமானவர் என்று மு.கா. தலைவர் நம்புவதால், பாயிசை தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்கு ஹக்கீம் தீர்மானித்துள்ளார் என்று, மு.கா. உட்தரப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இது இவ்வாறிருக்க, ஏற்கனவே அட்டாளைச்சேனை, வன்னி மற்றும் ஓட்டமாவடி உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவேன் என்று, மு.கா. தலைவர் உறுதியளித்துள்ளமை நினைவுகொள்ளத்தக்கது.

இந்தப்பட்டியலில், இப்போது புத்தளம் பாயிசும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்