மு.கா.வின் சாய்ந்தமருது கூட்டத்தில் கூச்சல்; அவசரமாக உரையை முடித்துக் கொண்டு கிளம்பினார் ஹக்கீம்
– அஹமட் –
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், நேற்றிரவு சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றியபோது, தொடர்ச்சியான கூச்சல்களும், கூக்குரல்களும் எழுந்தமையினால், மிக குறுகிய நேரத்துக்குள், அவசரமாக தனது உரையினை முடித்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கல்முனை மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் நேற்று திங்கட்கிழமை பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்த மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், சாய்ந்தமருது கடற்கரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதன்போது அங்கிருந்த ஒரு சாரார் கூச்சலிட்டு, ஹக்கீமுடைய உரைக்கு தடையேற்படுத்திக் கொண்டிருந்தனர்.
இதன்போது, கூச்சலிட்டவர்களை திட்டிய மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், தனது உரையினை அரை மணித்தியாலத்துக்குள், அவசரமாக நிறைவு செய்து கொண்டு, மேடையை விட்டுக் கிளம்பினார்.
ரஊப் ஹக்கீமுடைய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நேற்று சாய்ந்தமருது பிரதேசத்தில் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்ததோடு, அவருக்கு எதிராக சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வீடியோ