சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை; றிசாத் பங்கேற்ற கூட்டத்தில் பைசர் முஸ்தபா பகிரங்கமாக அறிவிப்பு

🕔 October 22, 2016

faizer-musthafa-0115
– சுஐப் எம். காசிம் –

சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை ஒன்றை வெகுவிரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்று, நான் இந்த மண்ணிலிருந்து உறுதியளிக்கின்றேன் என சாய்ந்தமருது பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்து – உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் கிழக்கு மாகாணத்துக்கான முதலாவது கிளையை – சாய்ந்தமருதுவில், அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் இணைந்து நேற்று வெள்ளிக்கிழமை திறந்துவைத்த பின்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரைாயாற்றிய போதே, அமைச்சர் பைசர் முஸ்தபா இந்த உறுதிமொழியை வழங்கினார்.

அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஏ.எம். ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பைசர் முஸ்தபா தொடர்ந்து உரையாற்றுகையில்;

“சாய்ந்தமருது மக்களின் நீண்டகால கோரிக்கை இனி நிறைவேறப் போகின்றது. இந்தப் பிரதேசத்துக்கு தனியான நகரசபை வேண்டுமென்று அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் சகோதரர் ஜெமீல் ஆகியோர், என்னிடம் நீண்டகாலம் வலியுறுத்தி வந்ததன் பிரதிபலன் இப்போது உங்களுக்குக் கிடைத்துவிட்டது.

இந்தப் பிரதேசத்துக்கு தனியான நகரசபை ஒன்று வேண்டுமென என்னிடம் வேறுசில அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்தபோதும், அவர்கள் இதயசுத்தியாக இந்தக் கோரிக்கையை விடுக்கவில்லை என்பதை நான் உணர்ந்துகொண்டேன். வெறுமனே புகைப்படங்களுக்காகவும், பத்திரிகை விளம்பரங்களுக்காவுமே அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்து உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை நான் அறிந்துகொண்டேன்.

ஆனால், அமைச்சர் றிசாத்தைப் பொறுத்தவரையில் உங்களின் பிரச்சனைகளை இனங்கண்டு, இதயசுத்தியோடு இந்த முயற்சியில் இறங்கினார் என்பதை பகிரங்கமாகக் கூறுகின்றேன்.

மர்ஹூம் அஷ்ரப் மறைந்த பின்னர் முஸ்லிம் சமூகத்தின் பற்றுமிக்க தலைவனாக அவரை நான் இனங்கண்டுள்ளேன்.

கிரேன்ட்பாசிலும், பேருவளையிலும் முஸ்லிம்களின் மீதும், பள்ளிகளின் மீதும் கொடூரங்கள் இழைக்கப்பட்டபோது – நானும், அமைச்சர் றிசாத்தும் மட்டுமே மக்களோடு மக்காளாக களத்தில் நின்று துணிந்து போரானோம்.

அமைச்சர் றிசாத் ஒரு சமூகப் பற்றாளர். சமூகத்துக்காக துணிந்து குரல் கொடுப்பவர். விளம்பரங்களுக்காவோ, பகட்டுகளுக்காகவோ அவர் பணிபுரிபவர் அல்ல. நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கின்ற போதும், சமூகத்துக்காக பாடுபடும் அமைச்சர் றிசாத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கின்றது. அவரை பலப்படுத்த வேண்டிய தேவையும் நமக்கு இருக்கின்றது.

நான் கண்டி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது, மாற்றுக் கட்சிக்காரன் என்று பாராமல் சமூகத்தின் நன்மைக்காக, என்னை வெற்றியடையச் செய்வதற்காக – அந்த மாவட்டத்துக்கு வந்து, அவர் உழைத்தமையை, நான் நன்றியுணர்வுடன் இங்கு கூற விரும்புகின்றேன்” என்றார்.faizer-musthafa-0113 faizer-musthafa-0114

Comments