‘மூலிகை பெட்ரோல்’ தயாரித்த ராமர் பிள்ளைக்கு, மூன்றாண்டு சிறைத் தண்டனை

🕔 October 15, 2016

ramar-pillai-0987ராமர் பிள்ளை என்கிற பெயரை, யாரும் அத்தனை எளிதில் மறந்திருக்க முடியாது. இந்தியா – தமிழ் நாட்டில் ‘மூலிகை பெட்ரோல்’ தயாரிப்பதாகக் கூறி, 1990 களில் பிரபலமடைந்தவர் ராமர் பிள்ளை.

தற்போது, ராமர் பிள்ளை உள்ளிட்ட 05 பேருக்கு 03 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தமிழ்நாடு எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 1999 – 2000 ம் ஆண்டுகளில் பெட்ரோலில் கலப்படம் செய்து ‘ராமர் பெட்ரோல்’ என விற்பனை செய்ததாக ராமர் பிள்ளை உள்ளிட்ட 05 பேர் மீது எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ததது. மேலும் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக கூறி பொதுமக்கள் பலரிடம் இந்திய மதிப்பில் 2.27 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை எழும்பூர் சிபிஐ நீதிமன்றம், ராமர் பிள்ளை உள்ளிட்ட 05 பேருக்கு 03 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து இன்று உத்தரவிட்டது.

முன்னதாக மூலிகை மூலம் பெட்ரோல் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்து விட்டதாக தமிழகத்தில் ராமர் பிள்ளை பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தியா முழுவதிலும் இச்செய்தி பெரும் விவாதத்தை கிளப்பியது.

மூலிகை மூலம் பெட்ரோல் தயாரிக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், தனது கண்டுபிடிப்பை எந்த அதிகாரிகள் முன்னிலையிலும் செய்து காட்டி நிரூபணம் செய்யத் தயார் என்று ராமர் பிள்ளை அறிவித்தார். அதன்படி செய்தும் காட்டினார்.

ஆனால், அதை விஞ்ஞானிகள் நம்ப மறுத்தனர். மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அறவே இல்லை என்றனர். அதன் பின்னர் ராமர் பிள்ளை தனது கண்டுபிடிப்பை ‘மூலிகை எரிபொருள்’ என்று பெயர் மாற்றி விற்பனையில் இறங்கினார். அதற்காக சென்னையில் 15 விற்பனை நிலையங்களை துவக்கினார்.

முன்பணம் பெற்றுக் கொண்டு விற்பனை ஏஜென்டுகளை நியமித்தார். ஆனால், அவர் விற்பனை செய்த எரிபொருளை பயன்படுத்திய வாகனங்கள் பழுதாகின. இந்த புகாரை அடுத்து சிபிஐ மேற்கொண்ட சோதனையிலேயே ராமர் பிள்ளை கைது செய்யப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்