தலைப்புச் செய்திகள்

பௌத்தத்துக்கு முன்னுரிமை என்கிற, பிரதமரின் கதை பொய்: சுமந்திரன் தெரிவிப்பு

Sumanthiran - 0112புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் இணங்கவில்லையென அந்தக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் யாப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு த.தே.கூ. உள்ளிட்ட நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளும் இணங்கியுள்ளனர் என்று, கொலன்னாவை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் ரணில் தெரிவித்திருந்தார்.

எனினும், பிரதமர் கூறிய விடயத்தினை முற்றாக மறுத்துள்ள சுமந்திரன், புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள வழிநடத்தல் குழுவில், இதுகுறித்து கலந்துரையாடப்படவில்லையென்றும், தேர்தல் சீர்திருத்தம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் அதிகார பகிர்வு குறித்து மட்டுமே இதுவரை பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, மதச் சார்பற்ற ஒரு நாடாகவும், அனைத்து மதங்களுக்கும் சமவுரிமை வழங்கும் வகையிலுமே புதிய அரசியல் யாப்பு அமையவேண்டுமென, த.தே.கூட்டமைப்பு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள சுமந்திரன், இவ்வாறான நிலையில் தமது கட்சிக்கு உடன்பாடில்லாத விடயத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென குறிப்பிட்டுள்ளார்.