புதிய அரசியலமைப்பை உருவாக்குபவர் விக்னேஸ்வரனல்ல: சபையில் பிரதமர் தெரிவிப்பு

🕔 October 8, 2016

Ranil - 096புதிய அரசியலமைப்பை உருவாக்குவது நாடாளுமன்றமே அன்றி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அல்ல என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பெரும்பான்மை மக்களும், அனைத்து கட்சிகளும் இணங்கி எடுக்கும் தீர்மானத்தையே நாம் நடைமுறைப்படுத்துவோம் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

அண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சர் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, மேற்கண்ட விடயங்களை பிரதமர் குறிப்பிட்டார்.

பிரதமர் மேலும் தெரிவிக்கையில்;

“அனைவருக்கும் தமது கோரிக்கைகளை முன்வைப்பதற்கு உரிமை உள்ளது. எனினும் நாங்கள்தான் இறுதி தீர்மானம் குறித்து முடிவெடுப்போம்.

யார் என்ன கருத்துக்களை வெளியிட்டாலும், எமது நாட்டின் பொரும்பான்மை சமூகங்கள், கட்சிகள் எடுக்கும் தீர்மானத்தையே நாம் நடைமுறைப்படுத்துவோம். புதிய அரசியலமைப்பு வேலைத்திட்டத்தை அரசியலமைப்பு பேரவைதான் முன்னெடுத்துச் செல்கிறது.

புதிய அரசியலமைப்பை வடக்கு முதலமைச்சர் ஏற்படுத்த போவதில்லை என்பதால், அவர் கருத்துக்களை முன்வைக்காது இருப்பதே சிறந்ததாகும். அரசியலமைப்பு உருவாக்கும் செயற்பாட்டை அரசியலமைப்பு பேரவையும், வழிநடத்தல் குழுவும் முன்னெடுக்கும்” என்றார்.

Comments