சிறுவர், முதியோர் தொடர்பில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்: இணைத் தலைவர் மன்சூர்

🕔 October 1, 2016

mansoor-00978– றிஜாஸ் அஹமட் –

“உங்களில் சிறியோருக்கு அன்பு காட்டாதவரும், முதியோருக்கு மரியாதை செலுத்தாதவரும் என்னை சார்ந்தவர் அல்ல”  என்கிற நபிமொழியினூடாக,  சிறுவர் மற்றும் முதியோர் தொடர்பான பெறுமானத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்று இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும், தேசிய காங்கிரசின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் தெரிவித்தார்.

ஒக்டோபர் முதலாம் திகதியை ஐக்கிய நாடுகள் சபையானது சிறுவர் மற்றும் முதியோர் தினமாக சில தசாப்தங்களுக்கு முன்னராகப் பிரகடனப்படுத்தியுள்ள போதும், 1400 வருடங்களுக்கு முன்னதாகவே, அல்லாஹ்வுடைய தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்களினூடாக, சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் தொடர்பான அக்கறை, மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை இறக்காமம் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.எம். நசீர் தலைமையில்  இடம்பெற்றது .

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் பொதே, பொறியியலாளர் மன்சூர் மேற்கண்ட விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

“உங்களில் சிறியோருக்கு அன்பு காட்டாதவரும், முதியோருக்கு மரியாதை செலுத்தாதவரும் என்னை சார்ந்தவர் அல்ல”  என்கிற நபிகளாரின் வாக்குக்கு அமைவாக, சிறுவர்கள் சரியாக பராமரிக்கப்பட வேண்டும்.

அது மட்டுமன்றி கல்வி, கலாசாரம், ஆன்மீகம் மற்றும் பண்பாடுகள் போன்றவற்றின்  முழுமையான அபிவிருத்தியை எமது சிறுவர்கள் அடைய வேண்டுமென்பதே எனது நீண்ட நாள் விருப்பமாகும். அதற்காக நான் முழுமையாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன்.

எனவே, சிறவர்கள் தங்கள் கல்வி நடவடிக்கைகளில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும்.

தற்காலத்தில் முதியோர் மீதான அக்கறை பெருவாரியாக குறைந்து வருகின்றது. பெற்று வளர்த்து சமுதாயத்துக்கு எம்மை அறிமுகம் செய்த பெற்றோரை, அற்ப காரணங்களுக்காக எம்மில் சிலர் தூக்கி எறிந்து விடுகின்றோம்

அல்லாஹ்வை பயந்து கொண்டு அனைவரும்  சிறுவர்கள் மீது அன்பு காட்டி முதியோரை மதித்து அரவணைத்து வாழ வேண்டும்” என்றார்.

சிறுவர் தினத்தையொட்டி இறக்காமம் பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, இதன்போது பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்