20 ஆயிரம் மில்லியன் ரூபாய் முதலீட்டில், டெக்னோ சிற்றி: ஆரம்பித்து வைத்தார் பிரதமர்

🕔 September 22, 2016
techno-city-044
– அஷ்ரப் ஏ சமத் –

மெரிக்கா, ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளில் பல்வேறு துறைகளிலே   எமது நாட்டு  விஞ்ஞானிகளும், தொழில் நுட்பவியலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். அவா்கள் இனி எமது தாய் நாட்டுக்கு வந்து,  பணியாற்ற வேண்டுமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார்.

விஞ்ஞான தொழில்நுட்ப  நகரத்தினை (டெக்னோ சிற்றி) இன்று வியாழக்கிழமை  கொழும்பு –  ஹோமகமவில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே, மேற்படி வேண்டுகோளினை பிரதம மந்திரி விடுத்தார்.

விஞ்ஞான தொழில்நுட்ப நகரத்தின் முதலாம் கட்ட நிர்மாணத்துக்காக, 20 ஆயிரம் மில்லியன் ரூபாய் முதலிடப்பட்டுள்ளது.

மேல்மாகண  மெகா பொலிசி அமைச்சு, விஞ்ஞான கைத்தொழில் ஆராய்ச்சி அமைச்சு மற்றும் உயா்கல்வி அமைச்சு ஆகியவை  இணைந்து  இத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளது.

இத் திட்டத்துக்காக தேசிய விஞ்ஞான நிலையம் 03 ஆயிரம் மில்லியன், ஆதர் சி கிளாக் மத்திய நிலையம் 05 ஆயிரம் மில்லியன், மொரட்டுவை பல்கலைக்கழகம் 05 ஆயிரம் மில்லியன், ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் 7,500 மில்லியன் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் 2096 மில்லியன் ரூபாய்களை முதலிட்டுள்ளன.

பிரதமர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

“இந்திய, அத்திலாந்திக் மற்றும் பசுபிக் சமுத்திரங்களின் மத்தியில் இலங்கை  அமையப்பெற்றுள்ளது. இதனால் இலங்கை எத்துறையிலும் முன்னேறுவதற்கு நிறைய  வாய்ப்புகள் உள்ளன.  வியாபாரம், துறைமுகம், ஆகாய விமானம், சுற்றுலா, அனல் மின்உற்பத்தி, பெற்றோலியம், விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் செய்மதி போன்ற சகல துறைகளிலும் அபிவிருத்தி அடைவதற்கு  எமது நாட்டில் மனித வளம்  நிறையவே உள்ளன.

இதற்காக நாம் புதிய நவீன முறையில் விஞ்ஞான தொழில் நுட்பத்துறையில் உற்பத்திகளை நாட வேண்டும்.  அதற்கான அறிவு ஞானமும் இலங்கையா்களிடம் உள்ளன.  நான் உலகின் பல பாகங்களுக்குச் சென்றுள்ளேன்.   அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அறபு நாடுகளில் –  பல்வேறு துறைகளிலும் எமது நாட்டு  விஞ்ஞானிகள் மற்றும் தொழில் நுட்பவியலாளர்கள் உள்ளனர்.  அவா்கள் இனி எமது தாய் நாட்டுக்கு வந்து பணியாற்ற வேண்டும்.

விஞ்ஞான தொழில்நுட்ப நகரை   சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்காகவே எமது அரசில் நல்ல திறமையான அமைச்சர்களான சுசில் பிரேம் ஜய்ந்த  மற்றும் சம்பிக ரணவக்க ஆகியோரிடம் இந்த அமைச்சுகள்  கையளிக்கப்பட்டுள்ளன.

இப்போழுது  பேஸ்புக் வந்துள்ளது. 10 வருடத்திற்கு முன்பு நாம் பேஸ்புக் வரும் என நினைக்கவில்லை. அதே போன்று செய்மதி, கையடக்க    தொலைபேசி, சாரதியின்றி ஓடக் கூடிய வாகனம்  போன்ற, பல்வேறு புதிய தகவல்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆகவே, உலக நாடுகளுடன் போட்டி போடக் கூடியவாறு – நவீன துறையில் எமது நாட்டின் விவசாயம், சுகாதாரம், கல்வி, தொழிநுட்பம் போன்ற துறைகளை அபிவிருத்தி செய்தால், எமது நாட்டினை நோக்கிக் கொண்டு செல்ல முடியும்” என்றார்.

techno-city-033 techno-city-022 techno-city-011

Comments

புதிது பேஸ்புக் பக்கம்