வட கிழக்கு இணைப்புக்காக, சிங்களத் தலைவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற, த.தே.கூட்டமைப்பு தயாராகி விட்டது: அதாஉல்லாஹ்

🕔 September 10, 2016

athaullah-011
– றிசாத் ஏ காதர் –

நாட்டில் பாரியதொரு சிங்கள – முஸ்லிம் இனக் கலவரத்தினை தோற்றுவித்துவிட்டு; ‘சிங்கள மக்களுடன் முஸ்லிம்கள் வாழ முடியாது. வாருங்கள் கிழக்கை வடக்குடன் இணைத்து, தமிழ் மக்களுடன் சேர்ந்து வாழ்வோம்’ என்கின்ற ஒரு நிலையை தோற்றுவிப்பதற்காகத்தான், பொதுபலசேனாவை வெளிச்சக்திகள் இயக்குகின்றன என்று, முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் தலைவருமான அதாஉல்லாஹ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் புத்தருடைய சிலை உடைக்கப்பட்டமைக்கு எதிராக வாயைத் திறக்காத பொதுபலசேனாவினர், முஸ்லிம்களை மட்டும் ஏன் திட்டிக் கொண்டு திரிகின்றனர் என்பதை சிந்தித்துப் பார்க்குமாறும், அவர் கோரிக்கை விடுத்தார்.

‘சுதந்திர கிழக்கு’ எனும் தலைப்பில் வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராக நடத்தப்பட்டு வரும், விழிப்புணர்வுக் கூட்டம், நேற்று வெள்ளிக்கிழமை மூதூரில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

“இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைபெற்றபொழுது நமக்கென்று பலமான ஒரு கட்சி இருக்கவில்லை. நமக்கென்று ஒரு குரல் இருக்கவில்லை. மிக இலகுவாக கிழக்கு முஸ்லிம்களை அவர்கள் வடக்குடன் இணைத்து எமது பலத்தைக் குறைத்தார்கள். அடிமைச் சாசனம் எழுதினார்கள். இதிலிருந்து விடுதலை பெறுவதற்காகவே நாங்கள் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரைப் பலப்படுத்தனோம்.

விடுதலைப் புலிகளோடு நோர்வேயும், ரணில் விக்ரமசிங்க வன்னியில் ஒப்பந்தம் செய்து எங்களை அடிமையாக்கினார்கள். அது மிகவும் பாரதூரமான அடிமை சாசனம் என்று எல்லோரும் சொன்னார்கள். அந்த ஒப்பந்தம் முஸ்லிம்களை சிறு குழு என்று குறிப்பிட்டது.

வடக்கிலிருந்து கிழக்கு மாகாணத்தை பிரிக்க வைத்தோம். இப்போதுதான் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்கின்றோம். பழைய காலங்களைப்போல் தமிழர்கள் எங்களை பார்க்கின்றார்கள் சந்தேகம் இல்லாமல் வாழ்கின்றோம்.

கிழக்குத் தமிழர்களும் முஸ்லிம்களும் உறவினர்களைப் போல், இரண்டறக் கலந்து உறவோடு வாழ்ந்தோம். இங்குள்ள தமிழ் மக்களிடம் வட மாகாணத்தவர்கள்தான் சந்தேகத்தை ஏற்படுத்தினார்.

வடக்கையும் – கிழக்கையும் இணைத்து முஸ்லிம்களை அடிமைகளாக மாற்றியமையினால், கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்குள்ளும் தமிழ் பேரினவாதம் உருவானது. மூதூரில் இருந்த தமிழ் மக்களிடையே இருந்து தமிழ் பேரினவாதம் உருவானது. ஆலையடிவேம்பில் இருந்து உருவானது. பாண்டிருப்பில் இருந்து உருவானது. இவை முதலில் இருக்கவில்லை.

வடக்கிலிருந்து கிழக்கு மாகாணம் வேறாகப் பிரிக்கப்பட்டால்தான், தமிழர்களும் முஸ்லிம்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு  ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று கூறினோம்.

கிழக்குக்கு  ஒரு மாகாண சபை உருவானது. அந்த சபையில்  முதல் முறையாக, தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவதற்கு நாங்கள் உடன்பட்டோம். பிள்ளையானை முதலமைச்சராக்கினோம். உரிமை வேண்டும் என்று களத்திலே இருந்து அவர்கள் ஆயுதமேந்திப் போராடியவர்கள். பின்னர், அதிலிருந்து வெளியேறிவந்து அரசியல் நீரோட்டத்திலே கலந்தார்கள். அப்போது, அவர்களுக்கு முன்னுரிமை அவர்களுக்கு கொடுக்க வேண்டுமென்ற நாங்கள் எண்ணினோம். அவர்களை கௌரவித்தோம்.

இரண்டாம் முறை திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நஜீப் ஏ மஜீத் முதலமைச்சரானார். மூன்றாவது முறை முஸ்லிம் காங்கிரசுக்குள் இருக்கின்ற ஒரு சகோதரன் முதலமைச்சராகியுள்ளார். அதைப்பற்றி எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. முஸ்லிம் சமூகம் விரும்பாத ஒரு விடயத்தை தமிழர் சமூகம் செய்யவோ, தமிழர் சமூகம் விரும்பாத ஒன்றை முஸ்லிம் சமூகம் செய்வதற்கோ முடியாதவாறு ஒரு கூட்டு நிலை – கிழக்கில் உருவாகியுள்ளது.

ஆகவே, ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. உலகம் அழிகின்ற வரைக்கும் இந்த நிலை இருந்தால் மாத்திரம்தான் இங்குவாழ முடியும். வடக்கிலே இருந்து எங்களை அனுப்பிவிட்டார்கள். அந்த மக்களுக்க மீள் குடியேற இப்போது விருப்பமில்லை. அவர்களின் வாழ்விடங்கள் அனைத்தும் காடாகிக் கிடக்கின்றன.

அரசியல் அமைப்பை மாற்றுகின்ற ஒரு சபையாகவும், தேர்தல் முறையை மாற்றுவதற்கான ஒரு சபையாகவும் நாடாளுமன்றம் மாற்றப்பட்டுள்ளது.  இந்த சூழ்நிலையில் முஸ்லிம்கள் ஒற்றுமைப்படவேண்டியுள்ளது. அதற்காக, முஸ்லிம் தலைமைகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படவேண்டியுள்ளது.

நாங்கள் இங்கு வாக்கு கேட்டுவரவில்லை. நாளை தேர்தலுமில்லை. நாங்கள் செய்த சேவைகளைச் சொல்லவும் இங்கு வரவில்லை. இது – நாட்டுக்கும் நமக்கும் முக்கியமான ஒரு காலமாகும். சிறுபான்மையினருக்கு மாத்திரமன்றி, சிறுபான்மையிலும் சிறுபான்மையாகவுள்ள முஸ்லிம்களுக்கு ஒரு முக்கியமான காலமாகும். இந்தக் காலத்தில் நாம் அவதானமாக இருக்கவேண்டும். அதற்காக, உங்களை விழிப்பூட்டுவதற்காகவே நாங்கள் இங்குவந்துள்ளோம்.

நாடாளுமன்றில் கட்சிகள் இருக்கின்றன. அமைச்சர்கள் இருக்கின்றார்கள். அப்படியிருக்க, நாங்கள் ஏன் இங்கு வந்தோம் என்று நீங்கள் நினைக்கலாம். மிகத்தெளிவாக ஓன்றைச் சொல்கின்றேன். அதனை விளக்குவதற்காகவே நோர்வேயினுடைய ஒப்பந்தத்தைப் பற்றிச் சொன்னேன். இப்போதும் நமது பிரதமருடைய ஆலோசகர்களாக நோர்வேகாரர்கள்தான் இருக்கின்றார்கள். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முன்னதாக, தேர்தல் முறையிலே மாற்றங்களைக் கொண்டு வரவுள்ளனர். இதன் பின்னணியிலும் நோர்வேக்காரர்கள்தான் இருக்கின்றார்கள்.

பெரும்பான்மைக் கட்சிகள் – தம்மை நிலைநிறுத்துவதற்கும், பெரும்பான்மை மக்கள் அதிகமதிகம் நாடாளுமன்றம் வருவதற்குமான ஏற்பாடுகளைத்தான் தேர்தல் முறை மாற்றம் மூலம் செய்துகொண்டிருக்கின்றார்கள். தொகுதிகளைக் குறைத்து அங்கத்தவர்களை வேறு விதமாகக் கூட்டி, வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியில் முஸ்லிம் மக்களினுடைய பிரதிநிதித்துவங்களை இல்லாமல் செய்கின்ற ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன.

மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாக வந்தபோது, நாடாளுமன்றில் இந்தவிடயம் தொடர்பாக இடம்பெற்ற கூட்டங்களில் கலந்துகொண்டு கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றோம். ‘சிறுபான்மை மக்களினுடைய பிரதிநித்துவம் அடிபடப் போகின்றது. எல்லா சிறுபான்மைக் கட்சிகளும் ஒற்றுமைப்படவேண்டும்’ என்று இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு – அமைச்சர் மனோ கணேசன் கூறியிருக்கின்றார்.

வடக்கையும் கிழக்கையும் இணைக்கின்ற விடயத்தில்தான் தமிழ் தலைவர்கள் கவனமாக இருக்கின்றார்கள். இலங்கையினுடைய நாடாளுமன்றம் அவர்களுக்கு ஒரு விடயமல்ல. வடக்கையும் கிழக்கையும் இணைத்து நாடாளுமன்றத்துக்குச் சமனான அதிகாரத்தினை எடுத்துக்கொண்டால் அவர்களுக்குப் போதுமாகும். வடகிழக்குக்கு வெளியில் வாழ்கின்ற தமிழர்களைப் பற்றியோ முஸ்லிம்களைப் பற்றியோ நாடாளுமன்றத்தைப் பற்றியோ அவர்கள் யோசிக்கவில்லை. ஆகவே தமிழ் தலைவர்கள் தொகுதி ரீதியான தேர்தல் முறை மாற்றத்தில் தலையிடவில்லை. சிங்களப் பேரினவாதிகளுக்கு எது விருப்பமோ, அதனை வடகிழக்கிற்கு வெளியில் செய்து கொடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆயத்தமாகிவிட்டது.

ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டாம். நினைக்கின்ற பொழுது ஜனாதிபதியை வேறொருவராக்குவதற்கும், பதவியிலிருந்து இறக்குவதற்கும், வெற்றிபெறச் செய்வதற்குமான அதிகாரம் தமிழ் – முஸ்லிம் மக்களிடம் இருக்கவேண்டும். அதுதான் சிறுபான்மையினருக்குள்ள பாரிய ஒரு அதிகாரமாகும். அந்த அதிகாரத்தை இல்லாதொழிக்க வேண்டாம். மேலும், தொகுதிகளைக் குறைக்கவேண்டாம்.

கிழக்கு மாகாணம் பிரியவேண்டும் என்று நாங்கள் மிகத்தெளிவாக சொன்னமைக்கு ஒரு காரணமுள்ளது. வட-கிழக்கிற்கு வெளியே வாழ்கின்ற மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம் மக்களை பாதுகாக்கின்ற தேவையிருக்கின்றது. அது மிக முக்கியமானது.
அவர்களுக்கு இன்றும் அச்சுறுத்தல் இருக்கின்றது. அந்த மக்களை பாதுகாப்பதற்கும் கிழக்கு மாகாணம்  வடக்கிலிருந்து பிரிக்கப்பட வேண்டும் என்று சொன்னோம்.

‘நீங்கள் வேண்டியதைச் செய்துகொள்ளுங்கள். எங்களுக்கு வடக்கு – கிழக்கை இணைத்துத் தாருங்கள் என்று, சிங்கள தலைவர்களிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூறுகின்றார்கள். இதுதான் அவர்களுடைய கோரிக்கை.

இனத்தை வைத்து, மக்களை சூடேற்றி, மக்களின் உணர்சிகளை கிளறி, எமது அரசியல் தலைவர்கள் நாடாளுமன்றம் செல்கின்றமையினைப் போல், இந்த விடயத்தினையும் எடுத்துக்கொள்ளக் கூடாது.

பொதுபலசேனா என்கின்ற அமைப்பு, ஏன் முஸ்லிம்களை மாத்திரம் இலக்கு வைக்கின்றார்கள்? முஸ்லிம் பள்ளிகளை மாத்திரம் ஏன் ஏசிக்கொண்டு இருக்கின்றார்கள்? சிங்கள மக்களைக் கொன்ற விடுதலைப் புலிகளுக்கு அவர்கள் ஏன் ஏசவில்லை? பௌத்த குருமார்களை அரந்தலாவையிலும், ஹெபத்திகொல்லாவையிலும் கொன்றுகுவித்த விடுதலைப் புலிகளுக்கு ஏன் ஏசவில்லை? ஏன் முஸ்லிம் மக்களை மாத்திரம் பொதுபலசேனாவினர் திட்டுகின்றனர் என்பது எங்களுக்கு பிரச்சினையாக உள்ளது. இந்த இடத்தில்தான், வெளிநாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களான டயஸ்போராவினர் மீது நாங்கள் சந்தேகம் கொள்கிறோம். நோர்வே நாட்டினர் மீதும் சந்தேகம் கொள்கிறோம். 1915ஆம் ஆண்டு சிங்கள –முஸ்லிம் இனக்கலவரம் இடம்பெற்றது. இந்த இனக்கலவரத்தில் பங்குகொண்டவர்கள்,  கலவரத்துக்கான காரணம், நோக்கம் எல்லாவற்றையும் பல பலவிதமாக நாங்கள் ஆராய்ந்திருக்கின்றோம். சேர்.பொன் ராமநாதன் சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு ஆதரவளிக்காமல், பௌத்த மக்களுக்கு ஆதரவாக பிரித்தனியா சென்று, அங்கு பேசி – வென்று வந்த சரித்திரங்களைக் காண்கிறோம். ஆயினும், பின்னர் ரீ.பீ. ஜாயாவைச் சந்தித்த பொன். ராமநாதன்; ‘என்னை மன்னித்து விடுங்கள். நான் சிறுபான்மை மக்களுக்கு துரோகமிழைத்துவிட்டேன்’ என்று சொன்ன வரலாறும் உள்ளது.

யாழ்ப்பாணத்தில் போர்துக்கீசர், ஒல்லாந்தருடைய ஆட்சிக்காலத்தில் நல்லூரிலிருந்து விரட்டப்பட்ட தமிழ், முஸ்லிம் மக்களைப்பற்றியும் ஆராய்ந்திருக்கின்றோம்.

இப்பொழுது யாருமே நேரடியாக களத்திளே இறங்கி காரியம் சாதிப்பதில்லை. மறைமுகமாகவே தமது இலக்கினை அடைந்து விடுகின்றனர். அமெரிக்கா, நேரடியாக சதாம் ஹூசைனை பிடிக்கவில்லை. கடாபியையும் நேரடியாகப் பிடிக்கவில்லை. அவர்கள் நேரடியாக எந்த நாட்டையும் கைப்பற்றுவதில்லை. உள்நாட்டில் கலவரங்களைத் தூண்டி, அங்கே இருக்கின்ற தலைவர்களுக்கு எதிராக குழுக்களை உருவாக்கி, ஆயுதங்களைக் கொடுத்து பிரச்சினைகளை ஏற்படுத்தி, அந்த நாட்டுத் தலைவர்களை தூக்கிலிட்டிருக்கின்றார்கள்.

அதேபோன்றுதான், இலங்கையிலும் முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் கலவரங்களை உருவாக்குவதாகவிருந்தால், அதற்கு ஒரு குழு உருவாக வேண்டும். அதனை நோர்வேயும் அங்குள்ள டயஸ்போராக்களும் சேர்ந்த கதை வெளியாகியுள்ளது. பொதுபலசேனாவுடன் பேசி, அவர்களை வழியனுப்பிய கதை இப்போது அம்பலமாகியுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் புத்தருடைய சிலையை உடைத்திருக்கிறார்கள். அந்த விடயத்துக்கும் பொதுபலசேனா வாய் திறக்கவில்லை என்றால் இதற்கு அர்த்தம் என்ன?

யாரோ எல்லாம் வந்து நமது உணர்ச்சிகளை அவர்களுக்கு லாபகரமாக பாவித்துவிட்டுச் செல்கின்றார்கள். வெளிநாடுகளும், உள்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களும் அதனைத்தான் செய்கின்றார்கள். புத்தரின் சிலை உடைக்கப்பட்டமைக்கு எதிராக ஏன் பொதுபலசேனா பேசவில்லை என்பதனை சிந்தியுங்கள். அரசியல் மாற்றங்களுக்கும் வேறுவேறு தேவைகளுக்குமாக, வெளிநாட்டவர்களும், உள்நாட்டவர்களும் முஸ்லிம்களை கிள்ளுக்கீரையாக  பாவித்திருக்கின்றார்கள்.

நாளை இந்த நாட்டில் பாரியதொரு சிங்கள – முஸ்லிம் இனக் கலவரத்தினை தோற்றுவித்துவிட்டு; ‘சிங்கள மக்களுடன் முஸ்லிம்கள் வாழ முடியாது, வாருங்கள் கிழக்கை வடக்குடன் இணைத்து, தமிழ் மக்களுடன் சேர்ந்து வாழ்வோம்’ என்கின்ற ஒரு நிலையை தோற்றுவிப்பதற்காகத்தான், பொதுபலசேனாவை வெளிச்சக்திகள் இயக்குகின்றனவோ என்கின்ற அச்சம் தோன்றுகின்றது. அது அச்சமல்ல திட்டவட்டமான உண்மையாகும்.

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமை நம்பவேண்டிய அவசியமில்லை. தாறுஸ்ஸலாம் – தலைவர் அஸ்ரப்பினால் உருவாக்கப்பட்டது. அது அனைத்து முழு முஸ்லிம்களுக்கும் சொந்தமானது. தலைவர் அஸ்ரப் மரணித்த பின்பு, இத்தனை காலமும் ஹக்கீம்  – முஸ்லிம் சமூகத்துக்கு செய்திருக்கின்ற ஒன்றை சொல்லுங்கள். முஸ்லிம் காங்கிரசுக்குள் ஏற்பட்டிருக்கின்ற பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மு.கா. தலைவர் ஹக்கீம் யார் என்பதனை கட்சியின் தவிசாளரும், செயலாளரும் அம்பலமாக்கியுள்ளனர். ஒவ்வொரு தேர்தலுக்கும் முஸ்லிம்களை பேரம்பேசி காசு பெற்றவிடயம் வெளியாகியிருக்கின்றது. தாருஸ்ஸலாம் பற்றிய ரகசியங்கள் வெளியாகியிருக்கின்றன. 18ஆவது திருத்தச் சட்டத்திற்கு வாங்கிய பணம் எவ்வளவு என்பது வெளியாகியிருக்கின்றது. மு.கா. தலைவரை அவருடைய குற்றங்களில் இருந்து பாதுகாப்பதற்காகத்தான் மஹிந்தவுடன் சேர்தோம் என்று தவிசாளர் கூறியிருக்கின்றார்.

கட்சி என்பது மதமல்ல. காலத்தின் தேவைதான் கட்சி.

முஸ்லிம் காங்கிரஸ் நமக்கான கட்சியா என்பதில் சந்தேகங்கள் இல்லை. நாங்களும் முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள்தான். ஹக்கீமைப்போன்று கடைசி நேரத்தில் புகார்தீன் ஹாஜியார் எம்.பியானதன் பின்னர் வந்து, நாங்கள் கட்சியில் சேர்ந்தவர்களல்லர்.
நாங்கள் கட்சியை உருவாக்குவதற்காக என்வெல்லாம் செய்யமுடியுமோ அத்தனையையும் செய்தோம். ஐக்கிய தேசியக் கட்சியினுடைய காலத்தில் அக்கட்சியின் உள்ளுர் ராஜாக்கள் இந்த பகுதிகளில் இருந்த காலத்தில், அவர்களை வீழ்த்திவிட்டு அவர்களுடைய படைப் பலங்களுக்கெல்லாம் முகம்கொடுத்து, முஸ்லிம் காங்கிரசை வளர்த்தோம்.

நாங்கள் பிரதேசவாதம் பேசுபவர்களில்லை. அப்படி நாங்கள் பேசியிருந்தால் முஸ்லிம் காங்கிரசின் தலைவராக ரஊப் ஹக்கீம் வந்திருக்க முடியாது.  நாங்கள்தான் ரஊப் ஹக்கீமை தலைவராக்கினோம். ஆனால், எங்களுக்கும், எமது மண்ணுக்கும் அவர் அநியாயம் செய்தார். ‘வாக்குப்போட்ட மக்களுக்கு அநியாயம் செய்கின்றீர்களே, நாங்கள் உங்களுக்குச் செய்த அநியாயம்தான் என்ன’ என்று ஹக்கீமிடம் கேட்டோம். ஹக்கீமை மு.கா.வுக்கு தலைவராக்கியமையைத் தவிர, வேறு எந்தவித அநியாயத்தையும் நாங்கள் செய்யவில்லை.

கிழக்குமாணத்தில் உள்ளவர்கள் மேலெழுந்து விடக் கூடாது என்பதற்காக, உயர்பீட உறுப்பினர்களின் எண்ணிக்கையை 90 ஆக அதிகரித்தார். கட்சியா சமுகமா என்று வருகின்றபோது சமூகம்தான் முக்கியமாகும். ஹக்கீம்  கட்சியை வைத்திருக்கட்டும், முஸ்லிம் சமூகத்தைக் காப்பாற்ற, மு.கா.விலிருந்து உடனே வெளியேறி வாருங்கள் என்று ஹசனலிக்கும், பசீருக்கும் அறைகூவல் விடுத்திருக்கின்றேன். ஹக்கீமை நம்பவேண்டிய அவசியமில்லை. அவர் மாட்டிக்கொண்ட இடங்களிலிருந்து அவரால் விடுபட முடியாது” என்றார்.

‘சுதந்திர கிழக்கு’ – மூதூர் கூட்டத்தில் இடம்பெற்ற ஏனைய உரைகளைப் படிக்க:

இலங்கையில் 05 மாகாணங்கள் இருந்த காலத்திலும், கிழக்கு தனித்திருந்தது: சட்டத்தரணி பஹீஜ்

கிழக்கை வடக்குடன் இணைக்கும் திருட்டுத்தனம் நடைபெறுகிறது: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்