டொக்டர் நக்பரின் முயற்சியினால், அபிவிருத்தி காணும் ஆயுர்வேத வைத்தியசாலை

🕔 September 7, 2016

Ayurvedic hosp - 011
– றிசாத் ஏ காதர் –

ட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலைக்கான வைத்தியர் விடுதியை 90 லட்சம் ரூபாய் நிதியில் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது.

அதேவேளை, வைத்தியசாலைக்கான மின் பிறப்பாக்கி, உபகரணங்கள் மற்றும் தளபாடங்களும் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.

அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் இந் நிகழ்வுகள் இடம்பெற்றன.

அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலைக்கு வைத்தியர் விடுதியொன்றின் தேவை நீண்டகாலமாக இருந்து வந்த நிலையில், இந்தக் கட்டிடத்தினை அமைப்பதற்கான நிதியினை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு ஒதுக்கியது. இதனையடுத்து குறித்த கட்டிடத்துக்கான அடிக்கல்லினை அண்மையில், மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் மற்றும் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் உள்ளிட்டோர் நட்டு வைத்தனர். மூன்று மாடிகளில் அமையவுள்ள இந்தக் கட்டிடத்துக்கான முதலாம் கட்ட வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வைத்தியசாலைக்கு தேவையான மின் பிறப்பாக்கி, உபகரணங்கள் மற்றும் தளபாடங்களையும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது. வைத்தியசாலையில் நடைபெற்ற மேற்படி விழாவில் வைத்து, இவற்றினை அமைச்சர் ரஊப் ஹக்கீம் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர் உள்ளிட்டோர் வழங்கி வைத்தனர்.

அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையின் தேவைகளை, அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல். எம். நக்பர், தனது அயராத முயற்சியின் மூலம், அரசியல்வாதிகளினூடாக நிறைவேற்றி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

2002 ஆம் ஆண்டு மத்திய மருந்தகமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த வைத்தியசாலையானது, மாவட்ட வைத்தியசாலையாகத் தரமுயர்ந்தது. தற்போது ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ள இந்த வைத்தியசாலையானது, கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்றாவது பெரிய ஆயுர்வேத வைத்தியசாலை என்பது குறிப்பிடத்தக்கது.Ayurvedic hosp - 022

Comments

புதிது பேஸ்புக் பக்கம்