கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளை வைத்து, மில்லியன் ரூபாய்களில் பேரம் பேசப்படுகிறது: ஏறாவூரில் அதாஉல்லா
🕔 September 2, 2016
– ஏறாவூரிலிருந்து றிசாத் ஏ காதர் –
கிழக்கு மாகாணத்தை வடக்கிலிருந்து பிரிக்க வேண்டுமென்று, ஜே.வி.பி.யினர் வழக்குத்தாக்கல் செய்தார்கள் என்ற போதும், வடக்கிலிருந்து கிழக்கு மாகாணம் பிரிய வேண்டும் என்கிற உணர்வினை கிழக்கு முஸ்லிம்களிடம் ஏற்படுத்தியவர் – தான் என்று முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.
ஏறாவூரில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘சுதந்திர கிழக்கு’ விழிப்பூட்டும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ் விடயத்தைக் கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
“கிழக்கு மாகாணம் தொடர்பில், தமிழ் தலைமைகள் பேசுவதாக இருந்தால், கிழக்கிலுள்ள முஸ்லிம் தலைமைகளுடன்தான் பேச வேண்டும் என்று, தமிழ் தலைமைகளுக்கு நாங்கள் கோரிக்கை விடுகிறோம்.
அரசியல் ரீதியாக நாங்கள் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளோம். இது, தலைவர் அஷ்ரப் எம்மைக் கொண்டு வந்து விட்ட இடமாகும். அவர் சந்திரிக்காவிடம் அரசியல் ரீதியாக சேர்ந்து கொண்டார்.
கிழக்கு மாகாண முஸ்லிம்களின் வாக்குகளை வைத்து, 300 மில்லியன் ரூபாய் தர முடியுமா? 500 மில்லியன் ரூபாய் தர முடியுமா என்று பேரம் பேசப்படுகிறது.
முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூத்த போராளிகளான ஹசனலி மற்றும் பசீர் சேகுதாவூத் ஆகியோரை, முஸ்லிம் காங்கிரசுக்குள் இன்று சில்லாங்கொட்டைகள் கேள்வி கேட்கின்றார்கள்.
தாருஸ்ஸலாம் நமக்குத் தேவையில்லை. கட்சியிலிருந்து வெளியேறி வா என்று, நான் பசீருக்குக் கோரிக்கை விடுக்கின்றேன்.
கிழக்கு மாகாணத்தை பாதுகாப்பதென்றால் ஹசனலி மற்றும் பசீர் ஆகியோரைக் காப்பாற்றியாக வேண்டும். மு.கா. தலைவர் ஹக்கீம் மரணித்தால், மு.காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாம் – ஹக்கீமுடைய மனைவிக்கு சொந்தமாகி விடும் என்று கூறப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்கவின் தலைமை, முஸ்லிம்களுக்கு இரண்டு தடவை துரோகம் செய்திருக்கிறது. இம்முறை அவ்வாறானதொரு துரோகம் நடக்காது என்று, ரணில் கூறுவாராயின் – இந்தக் கூட்டத்தை நாங்கள் நடத்த வேண்டிய தேவையிருக்காது.
கிழக்கினுடைய தலைவர்கள் கிழக்கிலிருந்து வரவேண்டும் என்பதற்காகத்தான் மு.காங்கிரசை அஸ்ரப் ஆரம்பித்தார். ஆனால், அவரின் மரணத்தின் பிறகு, மீண்டும் அந்தத் தலைமைத்துவம் பறிபோயிருக்கிறது” என்றார்.