விசேட தேவையுடையோருக்கான அரச கலை விழா, மாவட்ட மட்ட போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசளிப்பு
🕔 September 1, 2016
– பழுலுல்லாஹ் பர்ஹான் –
விசேட தேவையுடையோருக்கான அரச கலை விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட, மாவட்ட மட்டபோட்டித் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகமும், கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து இவ்வாண்டுக்கான அரச கலை விழாவினை நடத்துகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி பாராட்டு நிகழ்வில், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் ஓய்வுநிலை விரிவுரையாளர் ஈ.என். வோட்ஸ் வேத், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம். உதயகுமார் மற்றும் ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா உள்ளிட்டோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
இதன் போது அரச கலை விழா – 2016 முன்னிட்டு நடத்தப்பட்ட மாவட்ட மட்ட போட்டித் தொடரில் வெற்றி பெற்ற – விஷேட தேவையுடையோர் பரிசும், சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விஷேட தேவையுடைய மாணவர்களின் ஆற்றல்களையும், திறமைகளையும் வெளிக்கொணரும் வகையில், மட்டக்களப்பு தரிசனம் மாணவர்களின் குழு நாட்டார் பாடல், மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. மாணவர்களின் புத்தாக்க குழு நடனம், குறு நாடகம், ஏறாவூர் ஐயங்கேனி ஹிஸ்புல்லாஹ் வித்தியாலய மாணவர்களின் புத்தாக்க நடனம் உள்ளிட்ட ஏராளமான கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.